`தி கிரேமேன்' ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் இதுதானா... வியக்கும் ரசிகர்கள்

இரட்டை இயக்குனர்களான ஆண்டனி மற்றும் ஜோ ரஸ்ஸோ இயக்கும் தி கிரேமேன் படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொள்கிறார். அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இவர்களின் கிரேமேன் படம் எழுத்தாளர் மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. ஆக்ஷன் அட்வெஞ்சர் நிறைந்த இந்தப் படத்தில் கிறிஸ் ஈவான்ஸ் நடிக்கிறார். இதில், தனுஷின் கதாபாத்திரம் குறித்து படக்குழுவினர் ரகசியம் காத்து வந்தனர்.
இந்தநிலையில், தனுஷின் கேரக்டர் குறித்து எழுத்தாளர் மார்க் கிரேனி பேசியிருக்கிறார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த மார்க் கிரேனி, ``இந்தியாவைச் சேர்ந்த நடிகர் தனுஷை படத்தில் நடிக்க வைக்க அவர்கள் ஒப்பந்தம் செய்திருப்பது கேள்விப்பட்டு நான் ஆச்சர்யப்பட்டேன். அவருடன் எனக்கு அறிமுகம் இல்லை. படத்தில் முன்னாள் சிஐஏ ஆபரேட்டிவ் கோர்ட் ஜெண்ட்ரி கதாபாத்திரம் (ரியான் கோஸ்லிங் இந்த கேரக்டரில் நடிக்கிறார்) போல மற்றொரு காண்டிராக்ட் கொலைக் கும்பலின் தலைவனாக தனுஷ் நடிக்கலாம்’’ என்றார்.
தனுஷின் ரசிகர்கள் குறித்து பேசிய மார்க் கிரேனி, ``டிவிட்டரில் எனக்கு 6,000 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அது ஒரு பெரிய மேட்டரே இல்லை. அதன்பின்னர் தனுஷ் என்னை ஃபாலோ செய்தார். 97 லட்சம் பேர் பின்தொடரும் ஒரு பெரிய நடிகர் நமது கணக்கை ஃபாலோ செய்கிறாரே என வியந்து போனேன்’’ என கண்கள் விரிய பேசியிருக்கிறார்.