குக் வித் கோமாளி மூலம் வீடுதோறும் பிரபலமான செஃப் தாமு காலமானார்
தமிழகத்தின் பிரபல சமையல் கலைஞரும், தொலைக்காட்சி பிரபலமுமான செஃப் தாமு (கே. தாமோதரன்) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
சமையல் துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய செஃப் தாமு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பரிச்சயமான முகமாக மாறினார். பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளில் தனது அனுபவத்தையும் சமையல் நுணுக்கங்களையும் எளிமையாக எடுத்துரைத்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். செஃப் தாமுவின் தொலைக்காட்சி பயணத்தில் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முக்கிய இடத்தைப் பிடித்தது. அந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற அவர், போட்டியாளர்களின் உணவுகளை மதிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், கோமாளிகளுடன் கலகலப்பாக பழகிய விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் சமையல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்காத இளம் தலைமுறையினரிடமும் அவர் பிரபலமானார். ரசிகர்கள் பலரும் அவரை அன்புடன் தாமு அப்பா என்று அழைக்கும் அளவுக்கு அவரது தொலைக்காட்சி ஆளுமை மக்கள் மனதில் இடம்பிடித்தது.
பல தசாப்தங்களாக சமையல் மற்றும் ஹோட்டல் துறையில் பணியாற்றிய செஃப் தாமு, ஒரு சமையல் கலைஞராக மட்டுமின்றி சமையல் கல்வியிலும் தனது முத்திரையைப் பதித்தவர். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் சமையல் கலைஞர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிய அவர், தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமையல் பயிற்சிகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் மூலம் சமையல் கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சென்றார்.
