முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்!.. தியேட்டர் ஓனர்களுக்கு இனிமே கொண்டாட்டம் தான்!..

 
vijay

தமிழக திரையரங்குகளுக்கு முக்கிய சலுகையை வழங்கி முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை, உள்ளூர் பண்டிகை நாட்களிலும் கூடுதலாக 5 காட்சிகள் நடத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராக உயர்ந்த விஜய்யை பல தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட அமைப்புகள் தொடர்ந்து சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அதில் முக்கியமான கோரிக்கையாக இருந்த கூடுதல் காட்சிகள் தொடர்பான அனுமதிக்கே தற்போது அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால் திரையரங்குகள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியில் தினசரி 4 காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சூழல் நிலவியது. சிறப்புக் காட்சிகள் நடத்த அரசின் தனிப்பட்ட அனுமதி அவசியமாக இருந்ததுடன், இரவு 9 மணி காட்சிக்கே பல தடைகள் இருந்ததாக திரையரங்கு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து 7 நாட்கள் வரை தினமும் 5 காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முதல் வார வசூலில் புதிய படங்களுக்கு பெரிய அளவில் ஆதாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகாலை 6 அல்லது 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web