Categories: Cinema News latest news

ஹிட் அடிக்கும் சின்ன படங்கள்!.. ஷங்கர், மணிரத்னம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?!..

ஒரு படம் ஹிட் அடிக்க வேண்டுமெனில் அது பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டும், பெரிய நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டும் என்பது இல்லை. கதை நன்றாக இருந்தால் சின்ன படங்களும் வெற்றி பெறும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் கடந்த 25 வருடங்களாகத்தான் அதிகரித்து வருகிறது.

தமிழில் இதை துவங்கி வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படமே அதிக செலவில் உருவாக்கப்பட்டது. அது வெற்றிபெறவே தொடர்ந்து அதிக பட்ஜெட் படங்களை இயக்க துவங்கினார். காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி, ஐ, எந்திரன், 2.0 என அவர் இயக்கிய எல்லா படங்களுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது.

இவரைப்பார்த்து சில இயக்குனர்கள் அப்படி அதிக செலவில் படமெடுக்க துவங்கினார்கள். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிபெறாமல் போனதோடு தயாரிப்பாளர்களை கடனாளியாக மாற்றியது. ஒருகட்டத்தில் அதிக பட்ஜெட் படங்களை எடுக்க சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்தன. இதனால், ஹீரோக்களின் சம்பளமும் அதிகரித்தது.

ஒருபக்கம் பாகுபலி, பாகுபலி 2, கேஜிஎப், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா 2 போன்ற பேன் இண்டியா படங்களும் அதிக பட்ஜெட்டுகளில் உருவாகி வசூலை பெற்றது. அதேநேரம் பெரிய நடிகர்களை போட்டு பெரிய பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் எல்லா படங்களும் ஹிட் என சொல்ல முடியாது. லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி கமல் நடித்து வெளியான இந்தியன் 2, ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா, விக்ரமின் வீர தீர சூரன் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான தக் லைப் படமும் தோல்வி அடைந்திருக்கிறது.

இத்தனைக்கும் பெரிய படங்களுக்கு பல கோடிகள் செலவு செய்து புரமோஷன்களும் செய்யப்படுகிறது. தனி விமானத்தில் ஊர் ஊராக போய் புரமோஷன் செய்கிறார்கள். ஆனால், படத்தின் தரம் குறைவாகவே இருக்கிறது. அதேநேரம் அறிமுக இயக்குனர்கள் சின்ன பட்ஜெட்டில் சின்ன நடிகர்களை போட்டு எடுக்கும் படங்கள் வரவேற்பை பெற்று வருகிறது. லவ் டுடே, குட் நைட், லப்பர் பந்து, மகாராஜா, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றது. சூர்யாவின் ரெட்ரோ படத்தோடு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது. அதேபோல், தக் லைப் படத்தோடு வெளியான மெட்ராஸ் மேட்னி படம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். இல்லையெனில், எவ்வளவு செலவு செய்திருந்தாலும் ரஜினி, கமல், அஜித், சூர்யா போன்ற நடிகர்களே நடித்திருந்தாலும் படத்தின் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லையெனில் படம் ஓடாது என்பது நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா