இது நடந்தா 96 செகண்ட் பார்ட் வரும்!. இல்லனா எடுக்கமாட்டேன்-பிரேம் குமார்!..
ரசிகர்களை உலுக்கிய 96:
96 Movie Second part: பிரேம் குமார் இயக்கத்தில் 2018ம் வருடம் வெளியான திரைப்படம்தான் 96. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் திரிஷாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளியில் படிக்கும் போது இருவரிடையே ஏற்படும் காதல், சொல்ல முடியாமலும், வெல்ல முடியாமலும் போய் அந்த பெண்ணுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் இருவரும் சந்திக்கும் போது அவர்களுக்கிடையே என்ன நிகழ்கிறது என்பதை மிகவும் கவித்துவமாக காட்டி இருந்தார் பிரேம்.
மலரும் நினைவுகள்:
இந்த படத்தைப் பார்த்த 70,80 கிட்ஸ் பலருக்கும் தங்களின் பால்ய கால பள்ளி மற்றும் காதல் நினைவுகளை இப்படம் நினைவுபடுத்தியது. அந்த படத்தில் வரும் ராம், ஜானு ஆகிய கதாபாத்திரங்களாக ரசிகர்களே மாறினார்கள். எனவே இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. தமிழில் ஹிட் அடித்ததோடு பேசப்பட்டதால் இப்படம் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமியை வைத்து மெய்யழகன் என்கிற திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். அந்த படமும் ஒரு சூப்பர் ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
96 இரண்டாம் பாகம் அப்டேட்:
பிரேம்குமார் எங்கு சென்றாலும் ‘96 படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பீர்கள்?’ என பலரும் கேட்டு வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம்குமார் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை எனவும் சொன்னார்கள். அதன்பின் அந்த கதையில் சியான் விக்ரம் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதன்பின் விக்ரமும் நடிக்கவில்லை. இந்த படத்தில் லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்கள் நடித்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக சொல்லப்பட்டது.
விஜய் சேதுபதி, திரிஷா:
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம்குமார் ‘96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை முடித்து விட்டேன். நான் எழுதியதில் மிகச் சிறந்த கதை இது. 96 படத்தின் முதல் பாகத்தை விட இது இன்னும் சிறப்பாக இருப்பதாக என் நண்பர்கள் சொன்னார்கள். அதே நடிகர்களை வைத்து இந்த படத்தையும் எடுக்க விரும்புகிறேன். அது நடக்கவில்லை என்றால் இந்த படத்தையே எடுக்க மாட்டேன்’ என சொல்லி இருக்கிறார். எனவே 96 படத்திலிருந்து இரண்டாம் பாகம் உருவாவது விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோரின் கைகளில்தான் இருக்கிறது.
