Cinema News
மார்கனாக மாறிய ககன மார்கன்!.. விஜய் ஆண்டனி அடுத்த பட ரிலீஸ் தேதி அப்டேட் இதோ!..
விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்த “மார்கன்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மார்கன் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பை அவர் இன்று தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் ஆண்டனி தனது திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் பொது நிகழ்ச்சிகளில் குறைவாகவே பங்கேற்றாலும், தனது இசை, நடிப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அட்டக்கத்தி, சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய வியோ ஜான் பால் மார்கன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி தயாரித்தும், நடித்தும், இசையமைத்தும் உருவாகியுள்ள இப்படத்தில் அஜய் தீஷன், சமூத்திரக்கனி, மகாநதி சங்கர், வினோத் சாகர், பிரகிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“மார்கன்” ஒரு க்ரைம் த்ரில்லர் வகை திரைப்படமாகும். ‘ககன மார்கன்’ என்ற பெயருக்கு ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள், இந்த படம் மர்மங்கள் கதை உணர்ச்சிகள் மற்றும் பரபரப்பு நிறைந்த திருப்பங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்கன் படத்தின் முதல் பாடலான “சொல்லிடுமா” வீடியோ பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது மார்கன் திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் வள்ளிமயில் மற்றும் காக்கி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட்லர் திரைப்படத்தில் அவர் வித்தியாசமான ஜானரில் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தார். அதையடுத்து வெளியாகும் இந்த படமாவது அவருக்கு வெற்றியை தருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.