தி.மு.க ஒரு கார்ப்பரேட் கட்சி; ஸ்டாலின்தான் சேர்மன்... விளாசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்த இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். இந்த விழாவில் விழுப்புரம் மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான குமரகுரு எம்.எல்.ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.கவில் அவரது குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் பொறுப்புக்கு வர முடியாது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதாக ஸ்டாலின் சொல்கிறார். அதன் பிறகு, 200 தொகுதி என்று சொன்னார். இரண்டே நாளில் 34 தொகுதிகளை அவரே இழந்து விட்டார். அவர்களுக்கு மொத்தம் 34 தொகுதிதான் கிடைக்கும். அதுகூட இல்லாமலும் போகலாம். அது ஒரு குடும்பக் கட்சி. நாட்டு மக்களுக்காக திமுக என்ன செய்தது? திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கட்சி கிடையாது. ஸ்டாலின்தான் அதற்கு சேர்மேன். கனிமொழி, தயாநிதி மாறன் எல்லாம் நியாயஸ்தர்கள். அவர்கள் எல்லாம் ஸ்டாலின் சொல்வதைத் தான் கேட்பார்கள். அப்படிப்பட்ட கட்சிதான் திமுக. அந்தக் கட்சியில் குடும்பத்தினர் தவிர்த்து மற்ற யாரும் ஆட்சிக்கு வர முடியாது. கட்சியிலும் சரி; ஆட்சியிலும் சரி’’ என்று விமர்சித்தார்.