இசை தெய்வத்தின் 83வது பிறந்தநாள்!.. சிஎம் விஜய், கமல்ஹாசன் ஓடோடி வந்து வாழ்த்து சொல்லிட்டாங்களே!..
இசைஞானி இளையராஜா அவர்களின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து பதிவில், "தேனி மாவட்டம் பண்ணையபுரம் கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, 'அன்னக்கிளி' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, உலகப் புகழ்பெற்ற சிம்பொனி இசை வரை எண்ணற்ற மைல்கற்களை எட்டிய இளையராஜா, தமிழகத்திற்கு அளவற்ற பெருமை சேர்த்துள்ளார். அவரது இசை வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளியாகவும், உத்வேகத்தின் ஊற்றாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும்" என்று குறிப்பிட்டு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடிகரும், அரசியல் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், "உங்கள் இசை உங்கள் வயதை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிக காலம் நிலைத்திருக்கும். எங்கள் அபிலாஷைகள் அனைத்தையும் விஞ்சும் ஆயுட்காலம் உங்களுக்கும் கிடைக்கட்டும். உங்கள் இசையுடன் நீங்களும் தொடர்ந்து வாழுங்கள்" என்று வாழ்த்தியுள்ளார்.
மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இளையராஜாவுடன் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற உள்ள நிலையில் அப்படத்திற்கு மஞ்சணத்தி என்ற பெயரை நேற்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் இளையராஜாவின் இசைப் பயணம், இந்திய சினிமாவுக்கான அவரது பங்களிப்பு மற்றும் தலைமுறைகளைத் தாண்டி மக்களை கவர்ந்த அவரது இசை சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
