அஜித் அம்மா ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தியடையட்டும்.. முதலமைச்சர் விஜய் இரங்கல்

 
ajith

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மையார் உயிரிழந்த செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வரும் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தொழில்முறை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அஜித் மற்றும் விஜய் குறித்து எழுந்த ரசிகர் மோதல்களுக்கு மத்தியில், இருவரும் அமைதியான அணுகுமுறையையே கடைப்பிடித்து வந்துள்ளனர். திரைப்பட வெற்றிகள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட முக்கிய தருணங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்த நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளன.

தனது சமூக வலைதளப் பதிவில் விஜய், “என் அன்பு நண்பர் அஜித் குமாரின் தாயார்  மோகினி அம்மையார் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் சாந்தி அடையட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தனக்கு ஆதரவுத் தூணாகவும் அரவணைப்பாகவும் இருந்த தன் தாயாரை இழந்து துயரத்தில் இருக்கும் என் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, “என் அன்பு நண்பர்” என்று அஜித்தை குறிப்பிட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரையுலகின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக இருந்தாலும், மனிதநேயத்திற்கும் நட்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் அவர்களின் உறவு, இந்த துயரமான தருணத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அஜித்தின் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

From Around the web