பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல்!.. கரூர் செல்கிறாரா முதல்வர் விஜய்?..
முதல்வர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரச்சாரத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கே பல ஆயிரம் மக்கள் கூடிவிட்டனர். அதற்கு காரணம் நாமக்கல்லில் இருந்து மதியம் 3 மணிக்குள் விஜய் கரூர் வந்து விடுவார் என தவெக நிர்வாகிகளால் சொல்லப்பட்டது. ஆனால் விஜய் இரவு 7 மணிக்குதான் கரூருக்கு வந்தார்.
இதனால் அதிக அளவில் கூட்டம் கூடிவிட்டது. போலீசாராலும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. விஜய் பேசிக் கொண்டிருந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதில், பெண்கள், குழந்தைகளும் அடக்கம்..இது தவெகவுக்கு கரும்புள்ளியாக அமைந்தது. இதற்கு விஜயே ரணம் என திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், கரூர் சம்பவம் ஒரு சிலரின் சூழ்ச்சி என முதல்வர் விஜய் நம்புகிறார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒருபக்கம் கரூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்தும் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை என்கிற புகாரை திமுக வைத்தது. விஜயோ பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தவெக சார்பில் 20 லட்சம் நிதியுதவியும் செய்யப்பட்டது..
தற்போது விஜய் தமிழக முதல்வராகிவிட்ட நிலையில் இதுவரை அவர் கரூருக்கு செல்லவில்லை என திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், வருகிற ஜூலை இரண்டாவது வாரம் கருருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் விஜய் ஆறுதல் சொல்ல பரிசீலனை செய்து வருவதாக தற்போது செய்தி வெளியாகியிருக்கிறது.
