×

சென்னையை சின்னா பின்னமாக்கும் கொரோனா!  தொடரும் பாதிப்பும் உயிரிழப்பும்!

சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கோயம்பேடு மூலம் சென்னை தவிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், கேரளா வரை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

சென்னையில் மட்டும் கோயம்பேடு மூலமாக 206 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 15 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது. மேலும் சூளைமேட்டைச் சேர்ந்த இருவர், தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

சென்னை காவல்துறையினரும் கொரோனாவால் கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சென்னையில் காவல்துறையைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம், ஆண், பெண் விகிதம் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 424 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக நகரில் 391 பேரும் ராயபுரத்தில் 313 பேரும் தேனாம்பேட்டையில் 274 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 195 பேர் அண்ணாநகரில் 168 பேர் அம்பத்தூரில் 143 பேர் தண்டையார்பேட்டையில் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடையாறில் 95 பேர், திருவொற்றியூரில் 34 பேர், மாதவரத்தில் 30 பேர், பெருங்குடியில் 15 பேர், சோழிங்கநல்லூரில் 12 பேர், மணலியில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆலந்தூரில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 2 ஆயிரத்து 644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 358 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் மரணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 255 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 62.78 சதவீதம் ஆகும். பெண்கள் 37.18 சதவீதம் பேரும் திருநங்கைகள் 0.04 சதவீதம் பேரும் உள்ளனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News