80 லட்சம் வீட்டை விட்டு டேனியல் பாலாஜி அம்மா எங்கே இருக்காரு பாருங்க.. மறைந்த மகனை நினைத்து உருக்கம்
நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த பிறகு முதல் முறையாக அவரது தாயார், மகனின் வாழ்க்கை, ஆன்மிக நம்பிக்கை மற்றும் கடைசி நாட்கள் குறித்து பல உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “திருவான்மியூரில் பெரிய வீடு இருந்தபோதிலும், டேனியல் பாலாஜி தனது இறுதி காலங்களில் தான் கட்டிக்கொண்டிருந்த கோவிலிலேயே அதிக நேரம் தங்கி இருந்தார். அவர் உயிரிழப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்புகூட கோவில் திருவிழா குறித்து பேசிக்கொண்டிருந்தார். அவர் இருந்திருந்தால் அந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி இருப்பார்,” என்றார்.
மேலும், “படப்பிடிப்புகளுக்காக பாலாஜி வெளியே சென்றிருந்தால், என் இரண்டாவது மகன் தான் என்னை கவனித்துக்கொள்வான். எனக்கு தேவையான அனைத்தையும் என் மகன்கள் செய்து கொடுத்தார்கள்,” என்றும் தெரிவித்தார்.
பல நடிகர்கள் சொந்தமாக பிரம்மாண்ட வீடுகள் கட்டும் நிலையில், டேனியல் பாலாஜி கோவில் கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டியதாகவும் அவர் கூறினார். “உனக்காக ஒரு வீடு கட்டிக்கொள் என்று கேட்டபோது, ‘வீடு வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று பாலாஜி பதில் சொல்வார்,” என நினைவுகூர்ந்தார்.
டேனியல் பாலாஜி கடைசி நாட்களில் ஆன்மிக சிந்தனைகளில் அதிகமாக ஈடுபட்டிருந்ததாகவும், அவர் கூறிய பல விஷயங்கள் பின்னர் நடந்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். இதனால் இயக்குநர் வெற்றிமாறன்கூட, “நீ சொல்வது எல்லாம் சித்தர் போல நடக்கிறது; உனக்காக ஒரு விழா நடத்த வேண்டும்,” என்று கூறியதாக அவர் பகிர்ந்தார்.
மேலும், ஒரு சித்தர் தனது மகனிடம் “உன் தாயின் உயிருக்கு ஆபத்து உள்ளது; அவர் தப்பித்தால் நீயே பலியாகிவிடுவாய்” என்று கூறியிருந்ததாக, டேனியல் பாலாஜி மறைந்த பிறகே அவரது நண்பர் ஒருவர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
“80 லட்சம் மதிப்புள்ள பெரிய வீடு இருந்தும், கடவுள் மீது இருந்த பக்தியால் வாரத்தில் நான்கு நாட்கள் கோவிலிலேயே தங்குவார். கடைசி வரை தனக்கென ஒரு சொந்த வீடு அமைத்துக்கொள்ளவில்லை. அவர் இறந்தாலும் இன்னும் அவர் இருப்பதை நான் உணர்கிறேன். கோவிலுக்கு வருபவர்களும் அதையே சொல்கிறார்கள்,” என அவர் உருக்கமாக தெரிவித்தார்.
இறப்பதற்கு முன் ஒரு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று டேனியல் பாலாஜி விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், அதை நிறைவேற்ற முடியாமல் போனது வருத்தமாக இருப்பதாகவும் அவரது தாயார் கூறினார்.
மேலும், “சாமி சிலையை செதுக்குவதிலிருந்து அதை வர்ணம் பூசும் பணிவரை, தொழிலாளர்களுடன் சேர்ந்து பாலாஜியே அனைத்து வேலைகளையும் செய்தார்,” என்றும் தெரிவித்தார்.
நடிகர் முரளி தனது அண்ணன் என்றாலும், அதை டேனியல் பாலாஜி எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றும், முதலில் துணை இயக்குநராக திரையுலகில் நுழைந்து பின்னர் முன்னணி நடிகராக உயர்ந்தார் என்றும் அவரது தாயார் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.
