மாணவர்களுக்கு தமிழே தெரியல!.. ஃபீல் பண்ண தமிழ் முருகன் ஹீரோ தனுஷ்!..
நடிகர் தனுஷ், தான் படித்த தாய் சத்யா மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தனது சொந்த செலவில் மூன்று மாடிக் கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளார். அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்களிடம் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் ரசிகர்களைச் சந்தித்து தனுஷ் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதற்கிடையில், தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவரும் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திறப்பு விழாவில் மாணவர்களிடம் பேசிய தனுஷ், "நான் பள்ளியில் படித்தபோது ஆங்கிலத்தில் அவ்வளவு திறமையாக இருக்கவில்லை. ஆனால் தமிழில் சரளமாக இருந்தேன். இன்று பலர் ஆங்கிலத்தில் சிறப்பாக பேசுகிறார்கள். ஆனால் தமிழைப் படிக்கவும் எழுதவும் தெரியாமல் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
மேலும், "ஒரு பிரெஞ்சு திரைப்படத்தில் நடித்தபோது, ஆங்கிலம் தெரிந்திருப்பது கூடுதல் திறன் மட்டுமே. ஆனால் தாய்மொழி தெரிந்திருப்பதுதான் உண்மையான அடையாளம் என்று அவர்கள் கூறினார்கள். தமிழைத் தெரியாமல் இருப்பது பெருமை அல்ல; அது அவமானம்" என்று பேசிய அவர், மாணவர்களுக்கு தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தனுஷின் நண்பர்கள், சகோதரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். தனுஷ் கட்டிக்கொடுத்த புதிய கட்டிடத்திற்கு "தனுஷ் பிளாக்" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து, எதிர்காலத்தில் தங்களது பெயரிலும் இதுபோன்ற கட்டிடங்களை இந்தப் பள்ளிக்கு கட்டிக்கொடுத்து பெருமை சேர்க்க வேண்டும் என்று தனுஷ் ஊக்கமளித்து பேசினார்.
