ஓம் டைட்டிலுக்கு பதில் நாமம்னு வச்சிருக்கலாம்!.. என் விசுவாசம் சாய் பல்லவிக்குடா!.. விமர்சனம் இதோ!
அமரன் படத்தை போலவே இந்த படத்திலும் ஹீரோ சாய் பல்லவி தான். விஜய் டிவியில் உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் சாய் பல்லவி நடனமாடும் போது இயக்குநராக இருந்தவர் தான் ராஜ்குமார் பெரியசாமி.
அமரன் படத்திலும் சாய் பல்லவி கதாபாத்திரம் அற்புதமாக இருந்ததால் தான் அவருக்கு ராமாயணா என்கிற பாலிவுட் படமே கிடைத்தது. இந்நிலையில், ஓம் படத்திலும் சாய் பல்லவி தான் ஹீரோவாக தெரிகிறார்.
உலகத்திலேயே இப்படியொரு அண்டர்கவர் ரகசிய போலீஸும் எந்த விசாரணையும் இல்லாமல் உயிரை காப்பாற்றினார் என்ற உடனே மகன் போல நினைத்து தனது ஒட்டுமொத்த திருட்டு சாம்ராஜ்யத்தையும் வாக்குமூலமாக கொடுக்கும் அப்பாவியான ஒரு நெகட்டிவ் ரோலில் மம்மூட்டி நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது தான் கேள்விக்குறியாகவே உள்ளது.
மம்மூட்டி கூட பரவாயில்லை, இவருக்கும் மேல் ஒரு டான் இருக்கிறார். இன்டெர்போலுக்கு கூட அவர் யாருன்னு தெரியாது. ஆனால், அந்த சாகுல் ஹமிதை (நஸிருதீன் ஷா) அழகாக படம் பிடித்து போலீஸுக்கு காட்டுவது எல்லாம் ஸ்க்ரிப்ட்டாகவே எப்படி ராஜ்குமார் பெரியசாமி எழுதினார் என்பதே ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
அமரன் படத்தில் வேலை செய்த உதவி இயக்குநர்கள் எல்லாம் கிளம்பி விட்டார்களா? என்று தெரியவில்லை. சண்டைக் காட்சிகளில் ரோப் கட்டி தனுஷ் பறந்து வரும் காட்சிகள் கூட அப்பட்டமாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஒரு சிங்கிள் ஷாட் சீன் என சொல்லிவிட்டு கேமராவை ஆட்டி ஆட்டி எடுத்து அந்த காட்சியையும் சொதப்பி விட்டனர்.
ரகசியமாக திருவண்ணாமலையில் குடும்பம் வைத்து தனுஷ் இருப்பதை கூட கண்டு பிடிக்க முடியாத வில்லன் கேங்காக மம்மூட்டி இருப்பதும் அவரது நல்ல மனசை பார்த்து அவரை மட்டும் காப்பாதிடுங்க என தனுஷ் சாய் பல்லவியிடம் கெஞ்சுவதும், கடைசியாக தன் உயிரே போனாலும் பரவாயில்லை, 1000 டன் செம்மரக் கடத்தி வைத்திருக்கும் மம்மூட்டியை காப்பாற்றுகிறேன் என சாய் பல்லவி தியாகம் செய்வதுமாக ஓம் 3 மணி நேர ஓவர் டார்ச்சராகவே உள்ளது.
ஓம் - ஓவர் டார்ச்சர்
ரேட்டிங் - 2/5.
