Chef ஆகணும்னு ஆசைப்பட்டேன்.. இப்ப அதுதான் நடக்குது!.. இட்லி கடை விழாவில் பேசிய தனுஷ்!..
Idli Kadai: கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். துவக்கத்தில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகியவை இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது. அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். அசுரன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களுக்காகவும் தேசிய விருது வாங்கினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகர் இவர்.
இவரின் அடுத்த படமாக இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்தான் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய தனுஷ் ‘ஒரு Chef ஆகனும் என்பதான் என்னுடைய ஆசையாக இருந்தது. அதனாலயே என்னவோ தெரியல.. சமைக்கிற மாதிரி கதையாகவே எனக்கு அமையுது.. ஜகமே தந்திரம் படத்துல பரோட்டா போட்டேன்.. திருச்சிற்றம்பலம் படத்தில் டெலிவரி பாய்.. ராயன்ல ஃபாஸ்ட் ஃபுட் கடை.. இந்த படத்துல இட்லி சுட்டுட்டு இருக்கேன்.. எண்ணம் போல வாழ்க்கை என்பது போல நான் மனதில் நினைப்பதே நடக்கிறது’ என பேசி இருந்தார்.
தனுஷ் சொல்வது உண்மைதான். 15 வயதிலேயே அவர் ஸ்டார் ஹோட்டலில் Chef ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதற்காக படிக்க வேண்டும் எனவும் நினைத்தார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரின் அப்பா கஸ்தூரி ராஜாவும், செல்வராகவகணும் அவரை துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வைத்தனர். ‘ நான் நடிக்க மாட்டேன்.. Chef ஆகப்போகிறேன்’ என அவர் எவ்வளவோ அழுது புரண்டும் வீட்டில் யாரும் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் தனுஷும் தன்னை மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க துவங்கி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாறியிருக்கிறார்.
