விஜய்யை முதலில் வேலை செய்ய விடுங்க!.. அஜித் பட வில்லன் என்ன இப்படி முட்டுக்கொடுக்கிறாரே!..
நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சுரேஷ் கோபி, அதிரடி மற்றும் அரசியல் பின்னணிக் கதாபாத்திரங்களில் அதிக வரவேற்பைப் பெற்றவர். 1980களில் திரைத்துறையில் அறிமுகமான இவர் கமிஸ்னர் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்த அவரது கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் பேசப்படுகிறது. அதனைத் தொடர்ந்து லேலம், பத்திரம், ஏகலவ்யன், கருடன், ஐ உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.
திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டிய அவர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தற்போது மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கி, கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விஜய் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, “அவர் வேலை செய்யட்டும். உடனே உள்ளே சென்று இது சரியில்லை, அது சரியில்லை என்று கூற வேண்டாம். மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்,” என கூறினார்.
மேலும், விஜயின் அரசியல் கட்சி தற்போது கேரளாவிலும் தனது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டபோது, சுரேஷ் கோபி சிரிப்புடன், “அவர் எங்கு வேண்டுமானாலும் கட்சி தொடங்கட்டும். அதில் உங்களுக்கு என்ன கவலை?” என பதிலடி கொடுத்தார்.
