
Cinema News
உலகம் இருட்டானது!.. ரோபோ சங்கருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை!.. மிஷ்கின் வெளியிட்ட வீடியோ!…
Robo Shankar: உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் கடந்த 18ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணச் செய்தி ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரோபோ சங்கர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின் பல திரைப்படங்களிலும் நடித்தார். குறிப்பாக புலி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஸ்வாசம், மாரி, வேலைக்காரன் போன்ற படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது.
ரோபோ சங்கருக்கு சின்னத்திரை பிரபலங்களும், கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற சினிமா நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது:
10 நாட்களுக்கு முன்பு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. ‘அண்ணே நான் ரோபோ சங்கர் பேசுறேண்ணே. நீங்கள் கலந்து கொள்ளும் எல்லா டிவி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களை நேரில் பார்க்க வேண்டும்’ என்றார். அதோடு அவரின் மனைவியிடம் போனை கொடுத்தார். அந்த பெண் என்னை அண்ணா என அழைத்தார். அந்த குரலில் இருந்த அன்பை கேட்டு ‘நீ என் தங்கை அம்மா’ என சொன்னேன்.
‘எப்போது எனக்கு சமைத்துக் கொடுப்பாய்?’ என்றும் கேட்டேன். உடனே போனை வாங்கிய ரோபோ சங்கர் ‘அண்ணே உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்கண்ணே.. நாளைக்கே சமைத்துக் கொண்டு வந்து தருகிறேன்’ என அன்போடு சொன்னார். ஆனால் 10 நாட்களுக்குள் இப்படி நடந்து விட்டது. இந்த இயற்கை இருட்டானது. மக்களை மகிழ்விக்கும் மகா கலைஞர்களை இருட்டு அழைத்துக் கொள்கிறது. முன்பு விவேக்.. இப்போது ரோபோ சங்கர்…
என் பிறந்தநாளில் ஊரில் இருக்கக் கூடாது என்பதற்காக என்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக தனியாக ஒரு இடத்திற்கு வந்து விட்டேன். இங்கு வந்த பிறகுதான் இடிபோல இந்த செய்தி எனக்கு வந்தது. இனி எப்படி அந்த தங்கை ரோபோ சங்கர் இல்லாமல் எனக்கு உ.ணவு பரிமாறுவாள் என தெரியவில்லை. ரோபோ சங்கருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை காத்திருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என அந்த வீடியோவில் மிஷ்கின் பேசி இருக்கிறார்.