×

பத்தே நாட்களில் படப்பிடிப்பை நடத்தி சாதனை படைத்த இயக்குனர்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில திரைப்பட விழாவில் தனது "கெம்பிர்வ்" படத்துக்காக சிறந்த திரைக்கதை விருதை வென்றவர் இயக்குனர் வெங்கட் பரத்வாஜ்,  லாக்டவுன் காலத்தில் ஒரு முழு நீள திரைப்படத்தை தற்போது அவர் இயக்கியுள்ளார்.

 

 "தி பெயிண்டர்" என்று பெயரிடப்பட்ட அந்த கன்னடப் படம் சென்னை, தும்கூர், பெங்களூர், கங்காபுரா மற்றும் ஹெபல் ஆகிய ஐந்து வெவ்வேறு இடங்களில் 10 நாட்களில் படமாக்கப்பட்டது. ஒவ்வொரு படப்பிடிப்பும் தனித்தனியாக ஷூட் செய்யப்பட்டது, பின்னர் படமாக்கப்பட்ட காட்சிகள் எடிட்டிங் டேபிளில் ஒன்றாக இணைக்கப்பட்டு முழு திரைப்படமாக உருவாகியுள்ளது.

இது குறித்து வெங்கட் பரத்வாஜ் கூறுகையில், ‘இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் ஏப்ரல் மாதம் தொடங்கியது, லாக்டவுன் காலகட்டத்தில் ஒரு படத்தை ஷூட் செய்வது அத்தனை எளிதானது அல்ல.  யாரும் எங்கேயும் பயணிக்க முடியவில்லை. அடிப்படையாக தேவைப்படும்  உபகரணங்களை வரவழைப்பதும் சவாலாக இருந்தது. எனவே எளிதாக கிடைத்த விளக்குகள், கயிறுகள், மூங்கில் குச்சிகள் மற்றும் கம்பிகள் ஆகியவற்றை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 70 ஜிபி டேட்டாவை டெக்னீஷியன்களுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. லைட் பாய் தொடங்கி, மேக்கப் மேன்,  காஸ்ட்யூம் டிசைனர், கலை இயக்குனர், நடிகர்கள், கேமராமேன் என மொத்தம் 17 பேர் ஒருங்கிணைந்து இதற்காக செயல்பட்டோம்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘லாக்டவுன் காலக்கட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம், சுயநலம், பணத்தாசை, மிரட்டல், பணம் பறித்தல், சுரண்டல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் மக்கள் அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதை விளக்குகிறது. இந்தப் படத்தில் கொலை, குற்றம் மற்றும் பரபரப்பான ஆக்‌ஷனும் உள்ளது. முழுக் கதையையும் சொல்ல நான் விரும்பவில்லை, படம் வெளியான பிறகு மக்கள் நேரடியாகப் பார்த்துக் கொள்ளட்டும். மேலும் நாங்கள் படப்பிடிப்பு செய்த விதம்தான் வித்யாசமானதே தவிர, இதன் தரம் மற்றும் தொழில்நுட்பத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை, '' என்றார் வெங்கட் பரத்வாஜ்.

ஒரு மணி நேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் மே மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் ott platform-ல் நேரடியாகவும் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வெங்கட் பரத்வாஜ் தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரபூர்வமான செய்தி இதுவரை வரவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News