புது படத்தை டவுண்ட்லோட் பண்ணா நஷ்டம் உங்களுக்குதான்!.. எச்சரிக்கும் ராஜமவுலி!..
இப்போதெல்லாம் ஒரு புதிய திரைப்படத்தை தியேட்டர்களுக்கு சென்று பார்க்கும் பழக்கம் பரவலாக குறைந்துவிட்டது. தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடனும் கணிசமான பேர்தான் படம் பார்க்கிறார்கள். அதனால்தான் 80, 90களில் இருந்தது போல ஒரு திரைப்படம் 100, 200 நாட்களெல்லாம் இப்போது ஓடுவதில்லை. அதிகபட்சம் 50 நாட்கள் ஓடினாலே அது மிகப்பெரிய வெற்றி படம் என பார்க்கும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகரின் நடிகர்களின் படங்களாக இருந்தாலும் சரி அதிகபட்சம் வசூல் இரண்டு வாரம்தான். இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக பைரசி (Piracy) இருக்கிறது. அதாவது ஒரு புதிய திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது. இப்போது இதற்கெல்லாம் பல வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
பல வருடங்களாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செயல்பட்டு வருகிறது. சினிமா துறையினர் பல முயற்சிகள் செய்தும் இதையெல்லாம் தடுக்க முடியவில்லை. இவையெல்லாம் போக தற்போது டெலிகிராம் ஆப்பிலும் பலரும் புதிய படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். ஒருபக்கம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி வந்து விட்டதால் மூன்று வாரங்களுக்கு பின் எப்படியும் ஓடிடிக்கு வந்துவிடும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் பலரும் நினைக்கிறார்கள். இதனாலேயே தியேட்டர்களுக்கு செல்லும் வசூல் குறைந்துவிட்டது.

இணையதளத்தில் திருட்டுத்தனமாக புதிய படத்தை டவுன்லோட் செய்து பார்க்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதுவும் இப்போது எல்லோரிடமும் இன்டர்நெட் வசதியோடு கூடிய செல்போன் இருப்பதல் சுலபமாக அதை செய்து கொள்கிறார்கள். பிரிண்ட் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்நிலையில்தான் பைரசி பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் ராஜமௌலி ‘புது படங்களை இலவசமாக பார்க்கலாம் என பைரசி வெப்சைட்டுகளை மக்கள் நாடுகிறார்கள். ஆனால் இங்கு எதுவுமே இலவசம் கிடையாது. உங்களின் தனிப்பட்ட தரவுகளை திருடி அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இது பலருக்கும் தெரியவில்லை. Ibomma தளத்தை நடத்தியவரை கைது செய்திருக்கலாம். ஆனால் இதுபோல இன்னும் பல வெப்சைட்டுகள் உள்ளன. பைரஸியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் அதிக இழப்பு’ என சொல்லியிருக்கிறார்.
