×

ஏமாத்துறது விஜய் டிவிக்கு ஒன்னும் புதுசு இல்ல! - நடிகை கஸ்தூரி விளாசல்

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தனக்கு இதுநாள் வரை அதற்கான சம்பள தொகையை விஜய் டிவி நிறுவனம் கொடுக்கவே இல்லை நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி விளக்கமளித்துள்ள விஜய் டிவி ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக கஸ்தூரிக்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது. அவருடையை ஜி.எஸ்.டி பதிவு முறையில் சில தவறுகள் இருந்தது. எனவே, அதை மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம். சரியான ஆவணங்களை கஸ்தூரி கொடுத்த பின் அந்த தொகை அவருக்கு கொடுக்கப்படும். மேலும், விஜய் டிவியில் அவர் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்ச்சிக்கு அவர் விலைவரப்பட்டியல் (Invoice) இதுவரை சமர்பிக்கவில்லை. அதனால் அந்த தொகை தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியின் இந்த விளக்கத்தை ஏற்க கஸ்தூரி மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

பொய்யை நிஜமென்று ஊரை நம்பவைப்பது பிக் பாஸ் புகழ் விஜய் டிவிக்கு புதிதா என்ன? இப்பொழுது எனது சம்பள பாக்கிக்கான காரணம் என்ன என்று விஜய் டிவி தரப்பில் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இதுவும் அவர்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் போலவே தான். உண்மை போலிருக்கும், ஆனால் முழுக்க பொய்தான்.

நானும் நம்பினேன், ஒரு வருடம் பொறுமை காத்தேன் . விஜய் டிவி ஒரு பெரிய தொலைக்காட்சி, உலகப்புகழ் டிஸ்னி ஸ்டார் கார்பொரேட் நிறுவனம் என்று மதித்து காத்திருந்தேன் . கடைசியில் வெறுத்து போய் வேறு வழியே இல்லாமல் தான் சம்பள பாக்கி விஷயத்தை வெளிப்படையாக அறிவித்தேன்.

அவர்கள் கூறியிருக்கும் அபத்தங்களில் ஒன்று, சம்பள பாக்கி இல்லை, வரியை மட்டும் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது. GST வரியை அவர்கள் இஷ்டத்திற்கு கொடுக்காமல் பிடித்து வைக்கவெல்லாம் முடியாது. ஏனென்றால் GST வரி கட்டுவது அவர்கள் அல்ல, நான். அதையும், விஜய் டிவி எனக்கு எழுதி குடுத்த கணக்கின் படி , அவர்களின் சொல்படி நான் கட்டியுள்ளேன். எனது சம்பள படிவத்தை நிரப்பி கொடுத்ததே விஜய் டிவி பொருளாளர்தான். மேலும், வரியை பிடித்து வைப்பதானால் அரசுக்கும் எனக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கவேண்டும். அதெல்லாம் எதுவும் செய்யவில்லை. பாக்கி வைத்துவிட்டு இப்பொழுது புளுகுகிறார்கள்.

என்னவோ வேறு ஒரு நிகழ்ச்சி, அதற்க்கு நான் 'இன்வாய்ஸ்' கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே, அது எந்த நிகழ்ச்சி? கடந்த ஒரு வருடத்தில் அவர்கள் எந்தெந்த பிக் பாஸ் போட்டியாளரை வைத்து நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்கள் என்றுதான் ஊருக்கே தெரியுமே. என்னை வைத்து எந்த 'வேறொரு' நிகழ்ச்சியை செய்தார்களாம், அதற்கு நான் 'இன்வாய்ஸ்' அனுப்பவில்லையாம்?

நான் சம்பளம் கேட்டு அனுப்பிய நோட்டீசுகளுக்கும் சம்பளம் வராத நிலையில் நான் அரசுக்கு கட்டிய GST வரிக்கும் என்னிடம் கட்டுக்கட்டாக ஆதாரம் உள்ளன. விஜய் டிவியின் சில்லறை புத்தி இனி செல்லுபடியாகாது.


என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News