×

இதுல எதுவும் புதுசு இல்லையே தலைவரே... ஸ்டாலினின் 7 அறிவிப்புகளால் முகம்சுழிக்கும் உடன்பிறப்புகள்!

திருச்சி மாநாட்டில் தமிழகத்துக்கான தொலைநோக்குத் திட்டங்கள் என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தவை வெறும் வெற்று அறிவிப்புகளே.
 
இதுல எதுவும் புதுசு இல்லையே தலைவரே... ஸ்டாலினின் 7 அறிவிப்புகளால் முகம்சுழிக்கும் உடன்பிறப்புகள்!

அதிமுக அரசு கடந்த பத்தாண்டுகளாக செயல்படுத்தி வரும் திட்டங்களை நகலெடுத்து வேறு பெயர்களில் அறிவித்ததுதான் ஸ்டாலினின் சாதனை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த ஏழு அறிவிப்புகளும் சரியான புள்ளிவிவரங்கள் ஏதுமின்றி, நடைமுறைக்குச் சாத்தியமின்றி கட்டமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளவை என்கிறார்கள். 


1. வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு என்ற பெயரில் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டு செல்ல இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். இது தற்போதைய நடைமுறையைப் புரிந்துகொள்ளாத அரைவேக்காட்டுத் தனமான அறிவிப்பு என்று அக்கட்சியினரே முகம் சுழிக்கிறார்கள். சமீபத்திய தமிழ்நாடு அரசு இடைக்கால பட்ஜெட்டில் கூட தமிழக உள்நாட்டு உற்பத்தியின் அளவை 14.4% சதவிகிதமாக உயர்த்த அதிமுக அரசு முயற்சி செய்து வருகிறது. கொரோனா நோய் தொற்று இருந்த 2 ஆண்டுகள் தவிர, கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தின் ஜிடிபி இரண்டு இலக்கத்தை விட்டு கீழிறங்கியதில்லை. 

2. மகசூல் பெருக்கம்,  மகிழும் விவசாயி என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் தற்போது இருபோக நிலங்களாக 10 லட்சம் ஹெக்டர் உள்ளதாகவும், அதனை 20 லட்சம் ஹெக்டருக்கு உயர்த்த வேண்டும் என கூறினார். தமிழகத்தில் நெல் பயிரப்படும் நிலப்பரப்பின் அளவு சுமார் 17.58 லட்சம் ஹெக்டேர்.  தமிழ்நாட்டில் பயிரிடப்படும் நிலப்பரப்பின் மொத்த அளவு 56.72 லட்சம் ஹெக்டர். மாநிலத்தின் சராசரி அளவு 45.82 லட்சம் ஹெக்டர் சதவிகிதம் பரப்பளவு. மேலே குறிப்பிட்ட எந்த அளவுகளிலும் திமுக குறிப்பிட்ட பரப்பளவு அளவு ஒத்துப்போகவில்லை. திமுக கூறிய இந்தத் தகவல் முழுப் பொய். 

3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் என்ற தலைப்பில், நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50  விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காட்டிற்கு குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த 2019 ஆண்டில் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்ற பட்டத்தை தமிழகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.  மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை ஐந்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஸ்டாலின் சொன்னார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2019ல் நீர் மறுசுழற்சி நிலையம் உருவாக்கியதும், கிட்டத்தட்ட 20% சதவிகிதம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சொல்வது வெறும் கண்துடைப்பே.

4. அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் என்ற தலைப்பில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை 16லிருந்து 5% ஆக குறைக்கப் போவதாக ஸ்டாலின் கூறினார். கல்விக்கான (UDISE) ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் 16% என்று கூறுவது தவறான அறிக்கையென தமிழ்நாடு கல்வித்துறை தெரிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் இடைநிலை பள்ளி முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் சதவிகிதம் 99% ஆக உயர்த்தப்படும்  எனவும், இடைநிற்றல் சதவிகிதம்  0.75% சதவிகிதம் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொய்யான புள்ளிவிவரத்தை திமுக வெளியிட்டிருக்கிறது.


5. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்ற தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, பட்டியலினத்தவர், பழங்குடியினர் போன்றோருக்குக் கல்வி உதவி தொகை என்று ஸ்டாலின் கூறினார். தற்போதைய நிலையில், சுமார் 7.40 லட்சம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற்று வருகின்றனர். இடைக்கால பட்ஜெட்டில் இதற்காக சுமார் ரூ.374 கோடி அதிமுக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மதிய உணவு, தங்குமிடம் போன்ற செலவுகளை அரசே பொறுப்பேற்று மேற்கொண்டு வருகிறது. 

6.எழில்மிகு மாநகரங்கள் மாநிலம் என்ற தலைப்பில், நகர்ப்புறத்தில் கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் பெற்ற நகர்ப்புற வீடுகளின் விகிதம் 35லிருந்து 75 ஆக உயரும் என்றார். திமுகவின் நலத்திட்டமான குடிநீர் குழாய் இணைப்பு திட்டம் முதன் முதலில் திமுக ஆட்சியில் தான் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அதிமுக அரசு அதை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அதன் மூலம் சுமார் 80% சதவிகிதம் நகர்ப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

7.உயர்தர ஊரககட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம் என்ற தலைப்பில் எல்லாகிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணையவசதி ஏற்படுத்துதல் என்று கூறினார். திமுக மீண்டும் அதிமுக செய்த நலத்திட்டங்களுக்கு உண்டான நற்பெயரை பெற முயற்சிக்கிறது. ஏற்கனவே 98% சதவிகிதம் பாரத்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மூலம் கிராமங்களில் அதிவேக இனையவசதி சேவையை பெற்று வருகின்றனர்.  

அதிமுக அரசு ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களுக்குப் புதிய பெயர்களை மட்டும் வைத்து, அதைத் தாம் நிறைவேற்றுவேன் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். பெரிய அளவுக்கு பில்டப் கொடுத்து நடத்திய மாநாட்டில் திமுக வெளியிட்ட 7 அறிவிப்புகள் பற்றிய பேச்சு இரண்டு நாட்கள்கூட தொடரவில்லை என்பதுதான் உண்மை.

From around the web

Trending Videos

Tamilnadu News