கூட்டணி அமைச்சரவைக்கு வாய்ப்பில்லை - பாஜகவிற்கு முதல்வர் பதிலடி

தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவைக்கு வாய்ப்பே இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்ச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரத்தை நாளை துவங்கவுள்ளேன். வேலூரில் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுகவை பற்றி பேசலாமா?.. அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடி கோடியாக பணம்கைப்பற்றப்பட்டது. துரைமுருகன் தனது சொத்தை மதிப்பை வெளியிட தயாரா?..
நெமிலிசேரி மீஞ்சு வரையிலான பாலம் விரைவில் திறக்கப்படும். சென்னை போரூர் பாலத்திற்கு திமுக அடிக்கல் நாட்டிவிட்டு விட்டுவிட்டனர். ஆனால், அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டப்படவில்லை என திமுக பொய்யான புகார்களை கூறி வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் 15 பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
தமிழ்நாட்டை பற்றியும், அரசியலை பற்றியும் கமலுக்கு என்ன தெரியும்? சினிமாவில் வேண்டுமானால் அவர் ஹீரோவாக இருக்கலாம். அரசியலில் அவர் ஜீரோதான். அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது. ஆனால், அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை ஏற்பதில்லை என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அது தொடரும்.
ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு தலைவராக என்ன தகுதி இருக்கிறது? திமுகவில் வாரிசுகள் அடிப்படையில் இயங்கி வருகிறது. வேறு யாருக்கும் அங்கு பதவி கிடைக்காது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என முதல்வர் பழனிச்சாமி கடுமையாக சாடினார்.