ஜன நாயகன் வினோத் அடைந்திருக்கும் உச்சம் மகத்தானது - இரா.சரவணன்!
இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான 'தளபதி' விஜய் காம்பினேஷனில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த படம் 'ஜன நாயகன்'. ஹெச்.வினோத் குறித்து தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருபவர் இவரது நண்பரும், பிரபல இயக்குநருமான இரா.சரவணன்.
'ஜன நாயகன்' படத்தின் கதை விவாதத்திலும் கலந்து கொண்ட இவருடைய இன்றைய பதிவில் "‘துணிவு’ படம் ரிலீஸான நாளில் இயக்குநர் ஹெச்.வினோத் எதுகுறித்த சலனமும் இல்லாமல், சபரிமலையில் பாய் விரித்துத் தூங்கிய காட்சியைச் சட்டெனப் புகைப்படம் எடுத்தேன். எதையுமே சட்டை செய்யாத அவருடைய மனநிலை குறித்து அந்தப் புகைப்படத்துடன் அப்போது நான் எழுதிய பதிவு பெரும் கவனத்தைப் பெற்றது.
‘ஜனநாயகன்’ கதை விவாதம் முடிந்த நாளில் ஒரு பாறை மீது வினோத் படுத்துத் தூங்கிய காட்சியையும் அவருக்குத் தெரியாமல்தான் புகைப்படம் எடுத்தேன். ‘ஜனநாயகன்’ ரிலீஸான நாளில் அந்தப் புகைப்படத்துடன் எதையுமே மண்டைக்கு ஏற்றிக்கொள்ளாத அவருடைய மனநிலையைப் பதிவிட்டிருந்தேன். அடுத்த அரை மணி நேரத்திற்குள் பதறிப்போய் போன் பண்ணி, “தயவுசெஞ்சு அதை ரிமூவ் பண்ணிடு” என்றார் வினோத். “நீங்க தூங்குற வீடியோவே என்னிடம் இருக்கு. இதை ரிமூவ் பண்ணச் சொன்னீங்கன்னா, அந்த வீடியோவை அப்லோட் பண்ணிடுவேன்” எனச் சிரித்தேன். போனை வைத்துவிட்டார்.
கோரைப் பாயிலும், மலையிலும் வினோத் படுத்துத் தூங்கும் புகைப்படங்களை நான் எடுக்கக் காரணம், அந்தத் தூக்கத்தில் தெரிந்த நிம்மதி. நல்ல தூக்கத்திற்காக அவர் ஏங்கிய நாட்களை நான் கவனித்திருக்கிறேன்.
‘துணிவு’ படம் ரிலீஸான நாளில் இயக்குநர் ஹெச்.வினோத் எதுகுறித்த சலனமும் இல்லாமல், சபரிமலையில் பாய் விரித்துத் தூங்கிய காட்சியைச் சட்டெனப் புகைப்படம் எடுத்தேன். எதையுமே சட்டை செய்யாத அவருடைய மனநிலை குறித்து அந்தப் புகைப்படத்துடன் அப்போது நான் எழுதிய பதிவு பெரும் கவனத்தைப் பெற்றது.… pic.twitter.com/0euqgBGz3l
— இரா.சரவணன் (@erasaravanan) August 5, 2026
சினிமா பண்ணுவதற்கு முன்னரே வினோத் எனக்கு நல்ல பழக்கம். “குடிசையா இருந்தாலும் சரி, கொசுக்கடி இல்லாத வீட்ல வாழ்ந்துட்டா போதும்” என்பார் அடிக்கடி. கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கொசுக்கடியால் படாதபாடு பட்ட அவருடைய அனுபவம் அப்படிப்பட்டது. இன்று வினோத் அடைந்திருக்கும் உச்சம் மகத்தானது.
சமீபத்தில் கலாட்டா சேனலில் ‘ஜனநாயகன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய நாளில் வினோத்தின் நெருங்கிய நண்பனாக என்னை அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் பேசிச் சிரிப்பது போன்ற புகைப்படத்தை திரையில் காட்டி பேசிக்கொள்ளச் சொன்னார்கள். “நாங்க ரெண்டு பேரும் பேசுறதை நீங்க ஒளிபரப்ப முடியாதே…” என்றார் வினோத். பிறகு வினோத்தை நான் பேட்டி எடுக்கும் வகையில் கேள்வி கேட்க ஏற்பாடானது. சட்டெனக் கேட்டேன்…
“கொசுக்களே இல்லாத தேசத்தில்கூட உங்களால் இப்போது குடிபோக முடியும். ஆனால், கொசுக்கடி காலத்தில்கூட நிம்மதியாகத் தூங்கிய நீங்கள், இப்போ நிம்மதியா தூங்குறீங்களா?” என்றேன். நொடியும் தாமதிக்காமல், “இல்லை” என்றார் வினோத்!" என்று கூறியுள்ளார்.
