Categories: Cinema News latest news throwback stories

எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடலில் தப்பு கண்டுபிடித்த பிரபல கவிஞர்… தனது பாணியில் கலாய்த்து தள்ளிய வாலி…

தமிழ் சினிமாவின் வாலிபக் கவிஞர் என்று போற்றப்படும் கவிஞர் வாலி, மிகவும் குறும்புத்தனமாக பதிலளிப்பதில் வல்லவர். குதர்க்கமான கேள்விகளுக்கு அவர் அளிக்கும் குறும்புத்தனமான பதில்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை.

Vaali

கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்கு பல முக்கியமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்படி அவர் எழுதிய ஹிட் பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் “நான் ஆணையிட்டால்”. இப்பாடல் எம்.ஜி.ஆர் நடித்த “எங்க வீட்டுப் பிள்ளை” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகும்.

MGR in Enga Veetu Pillai

எம்.ஜி.ஆர் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது இப்பாடல்தான். எம்.ஜி.ஆரின் ஆளுமையை குறிக்கும் வகையில் இப்பாடல் அமைந்திருந்தது. இப்போது கூட எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாக்களில் இப்பாடல் தவறாமல் ஒலிப்பெருக்கியில் ஒலிக்கப்படும்.

இந்த நிலையில் அப்போதுள்ள பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான உடுமலை நாராயணக்கவி,  இப்பாடலில் இடம்பெற்றிருந்த தவறான விஷயத்தை வாலியிடம் சுட்டிக்காட்டினார். அதனை வாலி எப்படி தனது குறும்புத்தனமான பதிலால் சமாளித்தார் என்பதை இப்போது பார்க்கலாம்.

Udumalai Kavi and Vaali

ஒரு நாள் உடுமலை நாராயணக்கவி, வாலியை சந்தித்தப்போது “என்ன வாலி இப்படி பாட்டெழுதிருக்கிறாய். ‘நான் ஆணையிடால் அது நடந்துவிட்டால்’ என்று ரொம்ப அபத்தமாய் பாட்டெழுதிருக்கிறாயே” என கூறினாராம்.

அதற்கு வாலி “அப்படி என்ன நான் அபத்தமாக எழுதிவிட்டேன்?” என கேட்டாராம். அதற்கு உடுமலை நாராயணக்கவி “அதாவது ‘நான் ஆணையிட்டால்’ என்ற வரிக்குப் பின் ‘அது நடந்துவிட்டால்’ என்று எழுதியிருக்கிறாய். ஒருவன் ஆணையிடும் இடத்தில் இருந்தால்தான் அவன் ஆணையிடவே முடியும். அப்படி ஒருவன் ஆணையிடும்போது அது நிச்சயமாக நடந்துவிடும். ஆனால் நீ ‘அது நடந்துவிட்டால்’ என்ற வரியை எழுதியிருக்கிறாய்.

ஆணையிடும் இடத்தில் இருந்து ஒருவன் ஆணையிடும்போது அது நிச்சயமாக நடந்துவிடும். ஆனால் ‘ஒரு வேளை அது நடந்துவிட்டால்’ என்று சந்தேகம் கிளப்பும் தொனியில் அதை நீ எழுதியிருக்கிறாய். இது மிகவும் அபத்தம்” என கூறியிருக்கிறார்.

Vaali

அதற்கு வாலி சம்பந்தமே இல்லாமல் அவரிடம் “உங்கள் மகன் இப்போது என்ன செய்கிறான்?” என கேட்டாராம். “என் மகன் பிசினஸ் செய்யப்போகிறேன் என்கிறான். பிசினஸ் எல்லாம் வேண்டாம் என நான் கூறிவருகிறேன் ஆனால் நான் சொல்லும் பேச்சையே கேட்க மாட்டேன் எங்கிறான்” என புலம்பினாராம்.

அதற்கு வாலி “என்ன சார். உங்க பையன், உங்க பேச்சையே கேட்க மாட்டிக்கிறார். நீங்களே ஆணையிடும் இடத்தில்தான் இருக்கிறீர்கள். அப்படியும் உங்கள் பேச்சை கேட்க மாட்டிக்கிறாரே” என குறும்புத்தனமாய் பேசி மடக்கிவிட்டாராம். இவ்வாறு வாலி தனது குறும்புத்தனத்தால் தனது வாழ்வில் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

Published by
Arun Prasad