S.Janaki: நாதம் என் ஜீவனே... செந்தூரப்பூவே... பூத உடல் மறைந்தாலும், மறையாத குரல்!
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட இசைப்பேரரசி எஸ்.ஜானகியின் மறைவு இந்தியத் திரை உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திராவில் குண்டூர் அருகில் ரேபப்ளே பகுதியில் 23.4.1938ல்பிறந்தார் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. 1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு படத்தில் தான் தமிழில் பாடகியாக அறிமுகமானார். இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர். இந்தியத் திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசி உள்பட 17 மொழிகளில் ஜானகி 48000 பாடல்களைப் பாடி இசை உலகுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கமல், ரஜினி படங்களில் பெரும்பாலான புகழ்பெற்ற பாடல்களைப் பாடி அசத்தியவர் எஸ்.ஜானகி. 80ஸ் கிட்ஸ்களின் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியவர் இவர் தான். இவர் ஆண்குரல், சிறு குழந்தைகளின் குரல், வயதான குரல் என மிமிக்ரி செய்து பாடியவர் எஸ்.ஜானகி. இப்படி பாடும் ஒரே பாடகி இவர் தான். 9 வயதில் இருந்தே பாட ஆரம்பித்துள்ளார் என்று தெரிகிறது.
அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் திறமைகள் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து இருக்கும். தேனமுதக் குரலுக்குச் சொந்தக்காரர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். கானக்குயிலே முடிந்து விட்டதா உன் மூச்சு. உன் நாதம் இருக்கிறது. ஜீவன் இல்லையே என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பாடல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா..? இறக்கி வைக்க முடியாத சோகம் பலருக்கும் இருக்கும். அவருக்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.. என்று தெரிவித்துள்ளார் கமல்.
4முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். செந்தூரப்பூவே, ஊருசனம் தூங்கிடுச்சு, கொடியிலே மல்லியப்பூ, பூவரசம்பூ பூத்தாச்சு, ஆசை அதிகம் வச்சி, மச்சானைப் பார்த்தீங்களா உள்பட ஆகிய புகழ்பெற்ற பாடல்களுக்குச் சொந்தக்காரர் எஸ்.ஜானகி. 1982ல் வெளியான காதல் ஓவியம் படத்தில் இவர் பாடிய நாதம் என் ஜீவனே பாடலைக் கேட்கும் போது நமக்கு இசை மேல் இவர் எந்தளவு காதல் கொண்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இளையராஜாவின் இன்னிசையில் அந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் இனி எஸ்.ஜானகி நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
