Thalaivar 173 படத்தை யார் இயக்கினால் சரியாக இருக்கும்?.. ரசிகர்கள் சொல்வது என்ன?..
தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கினால் சரியாக இருக்கும் என்கிற கேள்வியும், விவாதங்களும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. சில வருடங்களாகவே விஜயின் படத்தை இயக்கிய இயக்குனர்களை அழைத்துதான் ரஜினி வாய்ப்பு கொடுத்தார். விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை கொடுத்த முருகதாஸை அழைத்து தர்பார் படத்தில் நடித்தார்.
விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை அழைத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜை அழைத்து கூலி படத்தில் நடித்தார். எனவே விஜயை வைத்து கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவை ரஜினி அழைத்துப் பேசலாம் என சிலர் சொல்கிறார்கள். ஏனெனில் அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற ஒரு மாஸ் படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவால் ரஜினிக்கும் ஒரு சூப்பர் மாஸ் படத்தை கொடுக்க முடியும்’ என சிலர் சொல்கிறார்கள். அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கவிருக்கிறார் என்றாலும் ரஜினி பட வாய்ப்பு என்றால் சிவகார்த்திகேயனே விட்டுக் கொடுப்பார் என்கிறார்கள்.

சிலரின் சாய்ஸோ ஹெச்.வினோத்தாக இருக்கிறது. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களையும் சிறப்பாக இயக்கியிருந்தார் ஹெச்.வினோத். அவரும் ஒரு சிறந்த இயக்குனர், அதோடு கமலை வைத்து ஒரு படம் துவங்குவதாக பேசப்பட்டு அது நடக்கவில்லை. எனவே கமலே ஹெச்.வினோத்தை அழைத்து பேச வாய்ப்பு இருக்கிறது. அதோடு, விஜயின் ஜனநாயகன் படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்கியிருப்பதால் அவரை ரஜினியும் அதற்கு சம்மதம் சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சிலர்.
சிலரோ ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ஏனெனில் அடிப்படையில் கார்த்திக் சுப்பாராஜ் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினி வைத்து பேட்ட என்கிற படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படமும் ரஜினிக்கு பிடித்த படங்களில் ஒன்று. எனவே அவர் கார்த்திக் சுப்புராஜ் அழைத்து கதை கேட்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். சிலரோ லோகேஷ் கனகராஜையே மீண்டும் ரஜினியும், கமலும் அழைத்து பேச வாய்ப்பிருக்கிறது என சொல்கிறார்கள்.
இப்படி பல இயக்குனர்களை ரசிகர்களே பரிந்துரை செய்கிறார்கள். ரஜினியும், கமலும் சேர்ந்து யாரை முடிவு செய்யப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
