Categories: latest news throwback stories

இந்திப் படத்தில் இருந்து தட்டித் தூக்கிய கண்ணதாசன்… உருவானது சூப்பர்ஹிட் சிவாஜி பாடல்

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கவியரசர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் ‘கித்னாபதல் கயல் இன்சான்’ என்ற இந்திப் படம் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்தப் படத்திற்கு பாடல் எழுதிக்கொண்டு இருந்தவர் பிரதீப் என்ற வட இந்தியக் கவிஞர். அந்தப் படத்தில் ‘கித்னா பதல் கயல் இன்சான்’ என்ற பாடலும் இடம்பெற்றிருந்தது.

கண்ணதாசன் முடிவு: அந்தப் பாடலைப் பற்றி பிரதீப் கண்ணதாசனிடம் விளக்கிச் சொல்லிக் கொண்டு இருந்தார். பாடலுக்கான பொருளையும் சொன்னார். அந்தப் பாடலுக்கான பொருள் கண்ணதாசனின் மனதை வருடிக் கொண்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிரதீப் சொன்னதுமே கண்ணதாசன் அதுபோன்ற பாடலை பாவமன்னிப்பு படத்தில் எழுத வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார்.

இந்திப் பாடல்: கித்னா பதல் கயா இன்சான் என்றால் மனிதன் எவ்வளவு தூரம் மாறிவிட்டான் என்று பொருள். அந்த இந்திப் பாடலின் முதல் வரி போன்று கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான் என்ற பாடலாக உருவெடுத்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மனிதன் மாறவிட்டான்: இந்தப் பாடலில் வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. வான்மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை என்று இயற்கையை வர்ணித்து விட்டு அவை எவையுமே மாறவில்லை. ஆனால் மனிதன் மாறவிட்டான் என்று கடைசி வரியை அசத்தலாகப் போட்டிருப்பார் கண்ணதாசன்.

தீவிர மதப்பற்று: அதே போல நிலை மாறினால் குணம் மாறுவார். பொய் நீதியும் நேர்மையும் தேடுவார். தினம் ஜாதியும் பேதமும் கூறுவார். அது வேதன் விதியென்றோதுவார். மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்று மனிதனின் தீவிர மதப்பற்றைப் பறைசாற்றி இருப்பார்.

அதே போல மனிதரில் தான் இந்த ஏற்றத் தாழ்வுகள், மனிதன் எதைக் கண்டு இந்த பணத்தைப் படைத்தான் என்றும் சாடியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். 1961ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, தேவிகா இணைந்து நடித்த படம் பாவ மன்னிப்பு. எம்எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை.

அத்தான் என்னத்தான், எல்லோரும் கொண்டாடுவோம், காலங்களில் அவள் வசந்தம், பாலிருக்கும் பழமிருக்கும், சிலர் அழுவார், வந்த நாள் முதல் ஆகிய மனது மறக்காத பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v