Categories: latest news throwback stories

அப்பனைத் திட்டுற பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? நாசரிடம் திட்டு வாங்கிய சிவாஜி

கமல் தயாரித்து திரைக்கதை எழுதி நடித்த படம் தேவர் மகன். இந்தப் படத்தில் சிவாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1992ல் வெளியான இந்தப் படம் 5 தேசிய விருதுகளை வாங்கியது. அது மட்டும் இல்லாமல் படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். கமலின் அப்பாவாக சிவாஜி நடித்துள்ளார்.

முக்கிய வில்லன்: இவர்களுடன் இணைந்து கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், தலைவாசல் விஜய், சங்கிலி முருகன், வடிவேலு, மதன்பாப் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின்போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தை படத்தில் முக்கிய வில்லனாக நடித்த நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

எவ்வளவு பெரிய ஆளுமை?: அப்போது தேவர் மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்து கொண்டு இருந்தது. பஞ்சாயத்துல சிவாஜி சாரை நான் கடுமையாகத் திட்ட வேண்டும். அந்தக் காட்சியைப் படமாக்கத் தயார் ஆனார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்?! நான் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்று இருந்தேன்.

சிவாஜி தைரியம் ஊட்டினார்: திடீரென என் அருகில் வந்த சிவாஜி சார் எனக்கு மட்டும் கேட்கும் வகையில் மெதுவாக, ‘பாய் அப்பனை திட்டுற பாக்கியம் எந்தப் பிள்ளைக்குக் கிடைக்கும்? யோசிச்சிக்கிட்டு நிக்காதய்யா… என்னைத் திட்டுய்யா…’ என்று எனக்கு தைரியம் ஊட்டினார். அதன்பிறகு தான் என்னால் நடிக்க முடிந்தது.

பிரிவியூ காட்சி: படப்பிடிப்பு முடிந்ததும் பிரிவியூ காட்சிக்கு என்னை அழைத்தனர். நான் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. அன்று இரவு எனக்கு போன் வந்தது. எதிர்முநையில் பிரபு பேசுகிறார். ‘அப்பா பேசணும்’னு சொன்னார் என்று சொல்லவும் எனக்குப் படபடப்பு அதிகமானது.

சிம்மக்குரல்: அடுத்த விநாடியில் சிம்மக்குரல் கர்ஜித்தது. ‘பாய் இப்பதான்யா தேவர்மகன் படத்தைப் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாதுய்யா… படத்துல மாயத்தேவனாகவே வாழ்ந்துருக்கேய்யா…’ என்று மனமாறப் பாராட்டினார். எனக்குப் பேசவே முடியவில்லை. குரல் கட்டிக் கொண்டது. இதைவிட ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும் என்று நாசர் நெகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v