Categories: latest news throwback stories

குட் நைட் படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ!.. மணிகண்டன் கைக்கு வந்தது இப்படித்தான்!…

Manikandan: மிமிக்ரி கலைஞர், டப்பிங் கலைஞர், இயக்குனர், நடிகர், ரைட்டர் என பல திறமைகளை கொண்டவர்தான் மணிகண்டன். மிகவும் கஷ்டப்பட்டு, பல அவமானங்கள், கண்ணீரை தாண்டி இப்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். திரையுலகில் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி கிடைக்கும் என பலருக்கும் காட்டியிருக்கிறார் அவர்.

மிமிக்ரி கலைஞர்: கல்லூரியில் படிக்கும்போதே விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிமிக்ரி செய்து காட்டினார். அதன்பின் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். சிங்கீதம் சீனிவாசராவ் உள்ளிட்ட பலரிடம் இவர் உதவியாளராக வேலை செய்திருக்கிறார். நடிப்பில் ஆர்வம் கொண்ட மணிகண்டன் நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தார்.

ரஜினியின் மகன்: பல டப்பிங் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் அவர். அதுதான் அவருக்கு நிரந்தர வருமானமாக இருந்து வருகிறது. ரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்து காலா படத்தில் ரஜினியின் மகன்களில் ஒருவராக நடித்திருந்தார். விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியதும் இவர்தான். அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வசன பகுதிகளில் வேலை செய்திருக்கிறார்.

குட் நைட் வாய்ப்பு: ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணுவாக வந்து அதிர வைத்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. குட் நைட் திரைப்படம் மணிகண்டனை கதையின் நாயகனாக மாற்றியது. இந்த படத்தில் குறட்டை நோயால் பாதிக்கப்பட்டவராக அற்புதமாக நடித்து பாராட்டை பெற்றார். அதோடு, இந்த படமும் வெற்றி பெற்றது.

குடும்பஸ்தன்: அதன்பின் லவ்வர் என்கிற படத்தில் நடித்தார். மேலும், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. ஊரெல்லாம் கடன் வாங்கி பொழப்பை ஓட்டும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். எனவே, மணிகண்டன் நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் கொடுக்கும் பேட்டி தொடர்பான வீடியோக்கள்தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், குட் நைட் படம் பற்றி பேசிய மணிகண்டன் ‘குட் நைட் பட வாய்ப்பு முதல் அசோக் செல்வனுக்குதான் சென்றது. ஒரு நாள் போனில் என்னை அழைத்த அவர் ‘ஒரு நல்ல கதை வந்திருக்கு. என்கிட்ட டேட்ஸ் இல்ல. நீ பண்றியா?’ன்னு கேட்டார். அப்படித்தான் குட் நைட் பட வாய்ப்பு எனக்கு வந்தது’ என சொல்லியிருக்கிறார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா