Categories: latest news throwback stories

ஒருநாள் முழுக்க அழுது கொண்டே இருந்தார் அப்பா!. சண்முக பாண்டியன் பகிர்ந்த சம்பவம்!..

விஜயகாந்த் எப்படிப்பட்ட மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். எல்லோரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவர். தன்னால் முடிந்தவரை பலருக்கும் உதவியவர். பல தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் உருவாக்கினார். பல புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

சக மனிதர்கள் மீது அன்பு செலுத்திய ஒரு மனிதராகவே கடைசி வரை இருந்தார். எல்லோரையும் சமமாக பார்த்தவர் விஜயகாந்த். அதனால்தான். தான் நடிக்கும் படங்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு போட்டார் விஜயகாந்த். இதை சினிமா உலகில் துவக்கி வைத்தவர் இவர்தான்.

மனிதர்கள் மீது மட்டுமில்லை. விலங்குகள் மீதும் அதிக பாசம் கொண்டவர் விஜயகாந்த். குறிப்பாக நிறைய நாய்களை வளர்த்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயகாந்துக்கும் அவர் வளர்த்த நாய்களுக்கும் இடையே இருந்த பாசம் பற்றி பேசியிருக்கிறார்.

அப்பா நிறைய நாய்களை வளர்த்தார். அவர் வளர்த்த எல்லா நாய்களுக்கும் இரண்டு பெயர்கள் மட்டுமே வைப்பார். ஒன்று ஜூலியர். மற்றொன்று சீசர். ஜூலி என்கிற நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்தார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜூலியை அப்பாதான் குளிக்க வைத்து, துவட்டிவிடுவார்.

ஒருநாள் அவர் ஷூட்டிங்கிற்கு கிளம்பி கொண்டிருந்த நேரம் டிரைவர் ஓடிவந்து ‘அண்ணே. ஜூலி செத்துப்போச்சுண்ணே’ என சொன்னார். அப்படியே நின்ற அப்பா ‘இன்னைக்கு என்னால் ஷூட்டிங்கிற்கு வரமுடியாது என சொல்லிவிடு’ என சொல்லிவிட்டு அறையில் போய் கதவை சாத்திக்கொண்டார். காலை முதல் மாலை வரை அழுதுகொண்டே இருந்தார். ஒருநாளும் ஷூட்டிங்கிற்கு அவர் லீவு விட்டதே இல்லை. ஆனால், ஆசையாக வளர்த்த நாய்க்காக அன்று அழுதார்.

அதேபோல், ஒருநாள் அவர் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஷூட்டிங் கிளம்பி சென்றபோது வீட்டில் இருந்த நாய் ஒன்று அவரின் காரின் பின்னாலேயே ஓடி ஏவிஎம் வாசல் வரை சென்றுவிட்டது. அதைப்பார்த்த அப்பா நாயை காரில் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் விட்டு அதன்பின் மீண்டும் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போய் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா