Categories: latest news throwback stories

கேப்டன் என்னிடம் கேட்டது அது ஒன்றுதான்!.. பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!…

Vijayakanth: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் கோலோச்சிய போதே புதுமுகமாக நுழைந்து போராடி வாய்ப்புகளை பெற்று ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். மதுரையில் இவரின் அப்பா ஒரு ரைஸ் மில்லை நடத்தி வந்தார். எனவே, வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. நல்ல பள்ளியில்தான் விஜயகாந்த் படித்தார்.

ஆனால், விஜயகாந்துக்கு ஏனோ படிப்பில் ஆர்வம் வரவில்லை. நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மதுரையை சுற்றுவது, சினிமா பார்ப்பது என ஜாலியாக பொழுதை கழித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பள்ளிக்குப்போவதையும் நிறுத்திவிட்டார். எனவே, ரைஸ் மில்லை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை விஜயகாந்திடம் கொடுத்தார் அவரின் தந்தை.

ஆனால், அதையும் சரியாக செய்யாமல் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்துவிட்டார். வாய்ப்புக்காக அலைந்தபோது துவக்கத்தில் நிறைய அவமானங்களையும் விஜயகாந்த் சந்தித்திருக்கிறார். சினிமாவில் படிப்படியாக வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

அதோடு, அரசியலிலும் நுழைந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். அப்போதுதான் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல வருடங்களாகவே சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் 2023 டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இவரின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் பேர் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இப்போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் இருக்கிறார். தேமுதிகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவுக்கு வந்துவிட்டார். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள படைத்தலைவன் படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரேமலதா ‘என் பசங்களுக்கு நான்தான் டியூசன் எடுப்பேன். ஒழுங்காக படிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அடி விழும். கேப்டன் என்கிட்ட சொன்ன ஒரே வார்த்தை ‘ நான் படிக்கல.. நீ படிச்சிருக்க.. ரெண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து டிகிரி வாங்க வைக்க வேண்டியது உன் வேலை’ என்றுதான். கல்யாணத்திற்கு பின் அவர் என்கிட்ட கேட்டது இது ஒன்னுதான். அந்த ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன்’ என சொல்லி உருகியிருக்கிறார்.

Published by
சிவா