பிரேம்ஜி இப்போ திருந்திட்டான்!.. அவன் தலையெழுத்து.. கங்கை அமரன் ஃபீலிங்...
இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி. வெங்கட் பிரபு முதன் முதலில் இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்திருந்தார். இவர் ஒரு இசைக் கலைஞரும் கூட. வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இசை படித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவுடன் பல படங்களில் இசை தொடர்பான பணிகளை செய்துள்ளார். சில படங்களில் பாடியும் இருக்கிறார்..
சென்னை 28 படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடிப்பார். வெங்கட்பிரபு கதை இல்லாமல் கூட படமெடுப்பார்.. ஆனால் தம்பி இல்லாமல் படமெடுக்க மாட்டார் என திரையுலகை சேர்ந்த பலரும் கிண்டலாக சொல்வார்கள்.
ஒருபக்கம் ஜாலி பேர்வழியான பிரேம்ஜி தனது சகோதரர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர்களுடன் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களிலும் இரவு நேரங்களில் பார்ட்டி செய்தவர். பல வருடங்களாகவே முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜி 2024ம் வருடம் இந்து என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
தற்போது பிரேம்ஜி எந்த பார்ட்டிக்கும் செல்வதில்லை. இதை வெங்கட்பிரபுவும் சமீபத்தில் உறுதி செய்தார். அதோடு பிரேம்ஜி மாமியார் மசாலா என்கிற மளிகை பொருளை தயாரித்து விற்பனையும் செய்து வருகிறார். இது தொடர்பான விளம்பர வீடியோக்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்..
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் ‘இப்பலாம் பிரேம்ஜி வீட்லயேதான் இருக்கான்.. வெளியே போறது கிடையாது.. இப்ப அவன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. திருந்தி நல்லபடியா மனைவியை வச்சிக்கிட்டு இருக்கிறான்.. அதுவரைக்கும் சந்தோசம்.. பிரேம்ஜி மாமியார் மசாலா என்று யுடியூப் சேனல் ஆரம்பிச்சு வீடியோ போட்டுக்கிட்டிருக்கான்.. பார்த்தேன்.. அவன் இப்படி மாறனும்னு அவன் தலையில எழுதியிருக்கு’ என்று கூறியிருக்கிறார்.
