விஷ்ணு விஷாலை அலேக்காக தூக்கிய ஐஸ்வர்யா லெக்ஷமி!.. கட்டா குஸ்தி 2 ரிலீஸ் எப்போ தெரியுமா?..
தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “கட்டா குஸ்தி 2” திரைப்படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். நகைச்சுவை மற்றும் விளையாட்டு பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் 2026 ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேல்ஸ் ஃபில்ம்ஸ் இண்டர்நெஸ்னல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் “வீரா” கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி “கீர்த்தி” கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், கே.எம். பாஸ்கரன் ஒளிப்பதிவையும், பரத் விக்ரமன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
முதல் பாகத்தின் தம்பதியராக இணைந்த வீரா மற்றும் கீர்த்தி கதாபாத்திரங்களின் வாழ்க்கை தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர்கள் ஒரு மகளை வளர்க்கும் குடும்ப வாழ்க்கையையும், அதனுடன் கலந்து வரும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சி தருணங்களையும் மையமாகக் கொண்டு கதை நகரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் “கட்டா குஸ்தி 2” படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முதல் பாகம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பை தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
