×

தமிழகத்தை அச்சுறுத்தும் கோயம்பேடு கொரோனா!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மூலம் பரவிய கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு நிர்வாகம் திணறிவருகிறது. சென்னை மட்டுமல்லாமல் வட மாவட்டங்களில் இதன் பாதிப்பை அதிகளவில் உணரமுடிகிறது.

 

கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே ஆவர். கோயம்பேட்டில் கொரோன தாக்கம் அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிய இவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தாலும் தினமும் கொத்துக் கொத்தாக பாதிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.

இன்று காலை பெரம்பலூர் மாவட்டத்தில் 33 பேரும், விழுப்புரத்தில் 69 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 பேர் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 215ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைவான அளவிலேயே பாதிப்புகள் பதிவான நிலையில் திடீரென 31 பேர் பாதிக்கப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் 31 பேரும் கோயம்பேடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இதுதவிர கேளம்பாக்கம் அரசு இல்லத்தில் கோயம்பேடு வந்தவர்கள் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என 240 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சீர்காழியில் மகளின் பிரசவத்திற்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு சென்ற தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 44 வயதான அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News