GV Prakash: வெற்றிமாறனுக்கே சொல்லிக்கொடுத்த ஜிவி பிரகாஷ்!.. தனுஷ் படத்தில் நடந்த சம்பவம்..
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர். வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவனில் இசையமைத்தவர் ஜி.வி பிரகாஷ். அந்த படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். அவர்கள் இருவருக்கும் இடையேயன நட்பு அப்போதே துவங்கியது.
அதன்பின் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். ஆடுகளம் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த ‘யாத்தே யாத்தே, ஒத்த சொல்லால, அய்யய்யோ நெஞ்சு அலையுதடி’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் அசுரன் படத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த பின்னணி இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதே பின்னனி இசையை அப்படியே தெலுங்கிலும் பயன்படுத்தினார்கள்.
அதேநேரம் வெற்றிமாறனின் விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவில்லை. இசைஞானி இளையராஜா இசையமைத்தார். மேலும் தற்போது சிம்புவுடன் வெற்றிமாறன் இணையவுள்ள படத்திலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவில்லை. இந்த படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார் என செய்திகள் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் ‘எனக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே உள்ள நட்பு பல வருடங்களாக நீடிக்கிறது. எங்களுக்கு இடையே ஆத்மார்த்தமான நட்பு உண்டு. அசுரன் படத்திற்கு பின்னணி இசை அமைத்த போது அந்த படத்தில் தனுஷின் மகனாக கென் கருணாஸ் நடித்த காட்சிக்கு பின்னணி இசை அமைத்தேன்.
அப்போது வெற்றிமாறனிடம் ‘கென் மிகவும் குண்டாக இருக்கிறார். தனுசுக்கு மகன் போல இல்லை. அவரை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யவைத்து உடல் எடையை குறைத்து அதன் பின் இந்த காட்சியை மீண்டும் ரீஷூட் செய்யுங்கள் என சொன்னேன். வெற்றிமாறனும் அதற்கு அதை ஏற்றுக் கொண்டு அதே போல் செய்தார். நான் எந்த புது படத்திற்கு இசையமைத்தாலும் அந்த பாடலை அவரிடம் போட்டுக் காட்டும் அளவுக்கு எங்களுக்குள் நட்பு உண்டு’ என பேசி இருக்கிறார்.
