Categories: Cinema News latest news

பட வாய்ப்பு இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த ஹெச்.வினோத்… அந்த இடத்துலதான் ஒரு டிவிஸ்ட்டு!

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஹெச்.வினோத். தனது முதல் படைப்பான “சதுரங்க வேட்டை” திரைப்படத்திலேயே தமிழ் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தவர் ஹெச்.வினோத். ஹெச்.வினோத் தொடக்கத்தில் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அப்போதே அவர் “சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் ஒன் லைனை உருவாக்கிவிட்டார்.

ஒரு முறை இயக்குனர் ராஜூ முருகனிடம் அந்த ஒன் லைன்-ஐ கூறியிருக்கிறார். ராஜூ முருகனுக்கு அந்த லைன் பிடித்துப்போக, இந்த கதைக்கான திரைக்கதையை உருவாக்கச் சொல்லியிருக்கிறார். அதன்படி பார்த்திபனிடம் இருந்து வெளியே வந்து திரைக்கதையை மொத்தமாக எழுதி பவுன்ட் ஸ்கிரிப்ட்டாக தயார் செய்திருக்கிறார். அதன் பின் பல தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்த ஹெச்.வினோத்திற்கு எந்த தயாரிப்பாளரும் கைக்கொடுக்கவில்லை.

இவ்வாறு வாய்ப்பு கிடைக்காததால் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் ஹெச்.வினோத். அந்த சமயத்தில் ஒரு நாள் கோயம்பேடு மார்க்கெட்டில் விஜய் மில்டனின் “கோலி சோடா” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது அங்கே விஜய் மில்டனை சந்தித்த ஹெச்.வினோத், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இவ்வாறு தான் ஒரு பவுண்ட் ஸ்கிரிப்ட் வைத்துள்ளதாகவும் கூறி அதனை அவரிடம் கொடுத்துள்ளார். அந்த பவுண்ட் ஸ்கிரிப்ட்டை படித்துப்பார்த்த விஜய் மில்டன், “இந்த கதை நன்றாக இருக்கிறது” என கூறி அவரது நண்பரும் இயக்குனருமான லிங்குசாமியிடம் ஹெச்.வினோத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஹெச்.வினோத் எழுதிய கதையையும் படித்து பார்த்த லிங்குசாமி, அந்த விஷயத்தை மனோபாலாவிடம் கூறியிருக்கிறார். உடனே மனோபாலா, “அந்த பையனை வரச்சொல்லுங்க. நானே அந்த படத்தை தயாரிக்கிறேன்” என கூறியுள்ளார். இவ்வாறுதான் “சதுரங்க வேட்டை” திரைப்படம் உருவாகியுள்ளது. அத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து “தீரன் அதிகாரம் ஒன்று”, “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”, “துணிவு” ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தற்போது ஹெச்.வினோத் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இதையும் படிங்க: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலயே!.. மனோபாலா தவறவிட்ட மிகப்பெரிய வாய்ப்பு!..

Arun Prasad
Published by
Arun Prasad