Good Bad Ugly: ஜெயிச்சுட்ட மாறா.. ‘குட் பேட் அக்லி’ பாடல் விவகாரம்.. என்னைக்கும் ராஜாதான்
சக்கைப்போடு போட்ட அஜித் படம்:
அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அவர் அனுமதி இன்றி மூன்று பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் இருந்து சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் காரணமாக திரைப்படத்தை வெளியிடுவதிலும் நீதிமன்றம் தடை விதித்ததோடு இளையராஜா இழப்பீடாக 5 கோடி ரூபாய் பட நிறுவனத்திடம் கோரினார்.
படத்தில் ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார் இளையராஜா. இந்த மூன்று பாடல்களையும் படத்திலிருந்து நீக்க வேண்டும். ஏழு நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பையும் கேட்க வேண்டும் என இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நீதிமன்றத்தை நாடும் இசைஞானி:
ரவுடிகள் கூட்டத்துடன் அஜித் சண்டை போடும் பொழுது அதன் பின்னணியில் இளமை இதோ இதோ போன்ற பாடலும் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒத்த ரூபாய் தாரேன் பாடலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல சமீப காலமாக வெளியாகும் புது படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி தங்களுடைய படத்தின் ஹைப்பை பட நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
சில சமயங்களில் அந்த படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் காரணமாகி விடுகின்றன. அதனால் தன் அனுமதி இன்றி பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா தரப்பிலிருந்து கூறப்பட்டது. அதைப் போல கடந்த ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் சக்கை போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திலும் இளையராஜா இசையமைத்த கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாடலும் பயன்படுத்தப்பட்டது.
எப்பவும் ராஜாதான்:
இதற்கும் இளையராஜா தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைப் போல தான் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் இளையராஜா தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இது பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்க தற்போது உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து சில உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும் அனுமதி இன்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது, குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கூறி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். பிரதான வழக்கின் விசாரணை ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
