×

இதயங்களை திருடிய 'இதயத்தை திருடாதே’... இதுபோல் வருமா இன்னொரு காதல் கதை!...

 
இதயங்களை திருடிய 'இதயத்தை திருடாதே’... இதுபோல் வருமா இன்னொரு காதல் கதை!...

ஒரு படம் பார்த்தால் உங்கள் இளமை விழித்துக்கொள்ளும் அசத்தல் அனுபவம் வேண்டுமா?...

அதுதான் இதயத்தை திருடாதே...

முதல் காட்சி.

அன்று கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா. பட்டம் தருபவர் சௌகார் ஜானகி..அதற்கும் 18 நிமிடம் லேட்டாக ஓடி வந்து காம்பவுண்ட் கேட்டை எகிறி குதித்து தம்மை கை மாற்றும் மாணவர் கூட்டம். சரியாக சௌகார் 'இந்த கால இளைஞர்கள் கையில் எதிர்காலம் இருக்கிறது' என சொல்லும் காட்சியில் சிகரெட்டை கையில் வைத்திருக்கும் ஷாட். சிகரெட்டை நாகார்ஜுனா உள்ளே இழுத்து புகையை வெளிவிடும் முன்னே 'பிரகாஷ் குமார்' எனக்கூப்பிட்டதும் பதக்கம் அணிவித்த சௌகாரை பார்த்து 'ஐ லவ் யூ' என சொல்லி சௌகார் விழிகள் விரிய....விடிய விடிய பாடல் ஆரம்பம்...என்ன ஒரு அசத்தலான முதல் காட்சி!...

'இதயத்தை திருடாதே' ஒரு தெலுங்கு டப்பிங் படம் தான். ஒரிஜினல் நேம் 'கீதாஞ்சலி'. கீதாஞ்சலின்னு ஒரு பதினொரு வயது டெல்லி பெண் சாவதற்கு முன் டைரியில் எழுதி வைத்த சில பக்கங்களை மணிரத்னம் படிக்க நேர்ந்தது. எமோஷனலாக அதில் அடிபட்ட மணிரத்னம் அந்தப்பெண் குழந்தையின் பெயரையே தன் படத்துக்கு வைத்தார். 

இந்த படத்துக்கு முன்பு வந்த 'அக்னிநட்சத்திரம்' படத்தை தெலுங்கில் வெங்கடேஷையும், நாகார்ஜுனாவையும் வைத்து எடுக்க திட்டமிட்டார் தெலுங்கு தயாரிப்பாளர் சி.எல்.நரசாரெட்டி. ஆனால் அது நடக்கமுடியாமல் போக அக்னிநட்சத்திரத்தை கர்ஷனா என தெலுங்கில் டப் செய்தார். அது ஹிட்டாக நாகார்ஜுனா மணியோடு ஒரு படம் செய்ய ஆசைப்பட்டு கதை கேட்க அவர் சொன்ன ஒரு ஒன்லைன் தான் கீதாஞ்சலி. 

அப்போது வந்த young die first என்கிற ஆங்கிலப்படத்தில் நாயகன், நாயகி இருவருக்கும் நோய் இருக்கும். அதை வைத்து மணி ஒரு கதையை டெவலப் செய்தார். மௌனராகம் படத்தில் கார்த்திக் ரேவதியிடம் காண்பிக்கும் அந்த ரசிக்கக்கூடிய லவ் டார்ச்சர் தான் இந்தப்படத்தோட மெயின் தீம். அப்போ மணி புதுமாப்பிள்ளை வேறு. சுஹாசினி தான் ஊட்டியில் மணியோடு தங்கி முதல் ஷாட் கிளாப் அடித்து துவக்கி இருக்கிறார்.

நாயகி கிரிஜா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் தங்கையின் தோழி. மணி-சுஹாசினி திருமணத்துக்கு வந்த அவரை நாயகியாக்கினர் இப்படத்தில். லண்டனை சேர்ந்த கன்னட அம்மாவுக்கும், பிரிட்டிஷ் அப்பாவுக்கும் பிறந்த கிரிஜா படத்தில் கலக்கி இருப்பார். கெண்டைக்கால் பெருத்த ஆண்கள் போல் நடக்கும் ஐரோப்பிய உடல்வாகுடைய பெண்களை இந்தியர்களுக்கு பிடிக்கும். கிரிஜாவும் அப்போதைய ஆண்களின் கனவுக்கன்னி தான்.

படத்தின் க்ளைமாக்ஸ் ட்ராஜிக் தான் முதலில். நாகார்ஜுனாவின் ரசிகர் மன்ற தலைவர் 'நாயகனோ, நாயகியோ இறக்கக்கூடாது...எப்படியோ வாழ்வார்கள்' என்பதாக முடிக்க கேட்க அதையே முடிவாக சோகமில்லாமல் வைத்தார்கள். ட்ராஜிக் முடிவு என்பதால் விநியோகஸ்தர்களும் கொடுத்த பணத்தை திரும்பக்கேட்க துவங்கினர். வெறுவழியின்றி ஃப்ளாட்டாக படம் முடிக்கப்பட்டது...

படத்தின் நாயகர்கள் பி.சி.ஸ்ரீராமும், இளையராஜாவும் தான். பி.சி.ஸ்ரீராம் ஊட்டியின் அழகை அதிகாலை நேரங்களில் காத்திருந்து படம் பிடித்த ஷாட்கள் இன்றும் கவிதை. மணிக்கு தன் காதல் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் கவிதையாக இருக்கவேண்டும் என தீர்மானமாக இருந்ததால் பி.சி.ஸ்ரீராமின் கேமிரா பல இடங்களில் அழகாக கவிதைகளை வடித்திருந்தது. நாகார்ஜுனாவின் வீடாக காட்டிய ஹோட்டல் அவ்வளவு அழகு. ஒருகாட்சியில் கிரிஜா கதவை திறந்ததும் பனி கதவிடுக்கின் வழியாக சரசரவென முன்னேறி வரும் காட்சி...ஆஹா... ‘ஓம் நமஹ’ பாடல் ரௌண்ட் ட்ராலியில் ஒரே ஷாட்டாக அவர் எடுத்திருந்தது உண்மையில் சாதனை. ஆத்தாடி அம்மாடி பாட்டின் ஸ்லோமோஷன் வெரிடஃப் வொர்க்.

ராஜா சொல்லவே வேண்டாம். படத்தின் பல மூட்களை கிரியேட் செய்வது ராஜாவின் பின்னணி இசை தான். பாடல்கள் இன்றும் மனோவின் குரலில் கேட்க கேட்க திகட்டாத விருந்து.  'ஓடிப்போலாமா' டயலாக்கும், கிரிஜாவின் உடையும் அப்போது பயங்கர வைரல்... 

படத்தின் சிறப்பம்சம் வரிசையாக...

1. இளையராஜாவின் பாடல்கள்
2. பி.சி.ஸ்ரீராம்
3. கிரிஜா
4. மணிரத்தினத்தின் இயக்கம்
5. இளையராஜாவின் பின்னணி இசை

காவியம் பாடவா தென்றலே, ஓ பாப்பா லாலி ஆகிய பாடல்கள் இப்போதும் பலரின் ஃபேவரைட்.

படம் 89ம் ஆண்டு ரிலீசாகி சக்கை போடு போட்டது. தெலுங்கை விட தமிழில் வெற்றி. நாகார்ஜுனாவுக்கு குரல் கொடுத்தவர் நம்ம நடிகர் சுரேஷ்... கிரிஜாவுக்கு நடிகை ரோஹிணி

"நீ ஒரு நாள் செத்துப்போயிடுவ. இதோ இந்த சித்ரா செத்து போயிடுவா.  அந்த சாரதாசெத்துப்போயிடுவா. இந்த செடி செத்துப்போயிடும். அதோ அந்த கொடிகூட செத்து போயிடும். நானும் செத்துப்போயிடுவேன் என்ன நான் ரெண்டு நாளைக்கு முன்னால செத்துப்போயிடுவேன். எனக்கு நாளையை பத்திலாம் கவலைகிடையாது. இன்னைக்குதான் முக்கியம்..." வசனங்கள் அழகான தொகுப்பு. 

நேரம் கிடைக்கும் போது பார்த்து இதயத்தை திருட்டு கொடுங்கள்...

- முகநூலில் இருந்து செல்வன் அன்பு

From around the web

Trending Videos

Tamilnadu News