இளையராஜாவுக்கு உரிமை கிடையாது!.. அச்சச்சோ.. இத்தனை படங்களுக்கு நோ சான்ஸ்!..
இசைஞானி இளையராஜா மற்றும் இசை நிறுவனமான சரிகமா இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காப்புரிமை வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.
அதன்படி, 'அன்னக்கிளி', '16 வயதினிலே', 'முள்ளும் மலரும்', 'கவிக்குயில்', 'நெற்றிக்கண்', 'ராஜா பார்வை', 'கல்யாணராமன்' உள்ளிட்ட மொத்தம் 134 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகள் மீது இளையராஜா உரிமை கோரவோ, அவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தவோ, மூன்றாம் தரப்பினருக்கு உரிமம் வழங்கவோ முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில், 134 படங்களின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளின் காப்புரிமை தங்களுக்கே சொந்தம் என சரிகமா நிறுவனம் வாதிட்டது. மேலும், சமீபத்தில் இளையராஜா இந்தப் பாடல்களில் சிலவற்றை டிஜிட்டல் இசைத் தளங்களில் பதிவேற்றி, அவற்றின் உரிமையை தாம் கொண்டிருப்பதாகக் கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய இடைக்காலத் தடை தொடரும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி திரைப்படங்கள், இணைய தளங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. தனது இசைப் படைப்புகளை பயன்படுத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என்று இளையராஜா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், தற்போது நீதிமன்றம் இளையராஜாவுக்கு எதிராக இடைக்காலத் தடையைத் தொடர்ந்துள்ளது. இருப்பினும், இது இறுதித் தீர்ப்பு அல்ல; வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே அந்தப் பாடல்களின் காப்புரிமை தொடர்பான சட்ட நிலை உறுதியாகும்.
