Categories: Cinema News latest news

13 வருஷமா பேச்சுவார்த்தை இல்ல.. இப்ப சந்தோஷம்..இப்படியே இருங்க இசைஞானி!….

இசைஞானி இளையராஜா இனிமையான இசைகளை கொடுத்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல், அவர் மிகவும் கோபக்காரர். அவருக்கு பிடிக்கவில்லை எனில் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் சரி பட்டென கோபத்தை காட்டி விடுவார். அவரின் சுயமாரியாதையை அவமதிப்பது போல் அவருக்கு தோன்றினால் அவர்களிடம் பேசுவதையும் நிறுத்திவிடுவார்.

பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம் போன்ற பல இயக்குனர்கள், நடிகர் ரஜினிகாந்த், பாடலாசிரியர் வைரமுத்து, மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியம், அவரின் உடன் பிறந்த தம்பி கங்கை அமரன் என திரையுலகில் பெரிய பட்டியலே இருக்கிறது.

ஆனால், சமீபகாலமாக அவரின் குணத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது ‘திரும்பி வா பாலு’ என வீடியோ வெளியிட்டார். பாரதிராஜாவை சந்தித்து புகைப்படமும் வெளியிட்டார். சினிமா விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் எல்லோருடனும் மகிழ்ச்சியாக பேசி வருகிறார். திடீரென பல வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ‘என்றென்றும் ரஜினி’ என பதிவிட்டார்.

இந்நிலையில், தற்போது 13 வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த தனது தம்பி கங்கை அமரனை நேரில் அழைத்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியானது. இதுபற்றி கருத்து தெரிவித்த கங்கை அமரன் ‘ அண்ணனிடம் பேசி 13 வருடங்கள் ஆனது. நேற்று அண்ணன் கூப்பிடுகிறார் என அழைப்பு வந்தது. இதற்காகத்தானே இத்தனை வருடம் காத்திருந்தேன். எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக பேசினார். மகிழ்ச்சியுடன் அங்கிருது கிளம்பினேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணனை சந்தித்த புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து ‘இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை’ என உருகியுள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா