நான் பேசினாலே சாதனைதான்.. - இளையராஜா
நான் சாதனைகளுக்காகவோ அல்லது விருதுகளுக்காகவோ காத்திருப்பவன் அல்ல; நான் நடந்தாலே, பேசினாலே அது சாதனைதான் என இசைஞானி இளையராஜா சென்னையில் நடைபெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஐகான்களில் ஒருவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவ்ர் தற்போதுள்ள இளம் இயக்குனர்களுடனும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வேலியண்ட் என்ற பிரம்மாண்ட சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு, சர்வதேச இசைக்கலைஞர்களுடன் இணைந்து தனது இசைக்கோவைகளை வழங்கினார். உலகத் தரத்திலான இந்த இசை விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரசிகர்களிடையே உரையாற்றிய இளையராஜா, தனது இசைப் பயணம் மற்றும் சாதனைகள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:

நமது மண்ணின் இசையையும், மேலைநாட்டின் சிம்பொனியையும் இணைத்து இசை உலக சரித்திரத்தில் மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நான் எப்போதுமே சாதனைகளுக்காகவோ அல்லது விருதுகளுக்காகவோ காத்திருப்பவன் கிடையாது. உண்மையில் சொல்லப்போனால், நான் நடந்தாலே சாதனைதான், நான் பேசினாலே அது ஒரு சாதனைதான்.
இளையராஜாவின் இந்தபேச்சைக் கேட்ட அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தனது தன்னம்பிக்கையையும், இசையின் மீதான தனது ஆளுமையையும் அவர் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் வியக்க வைத்தது.
மேலைநாட்டு சிம்பொனி இசையைத் தமிழ்ப் பாடல்களோடு இணைப்பதில் இளையராஜா முன்னோடியாகத் திகழ்கிறார். லண்டன் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனி அமைத்த முதல் ஆசியர் என்ற பெருமை கொண்டவர் அவர். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகவே இந்த வேலியண்ட் நிகழ்ச்சியும் அமைந்திருந்தது.
