×

“இந்தியாவில் 30 கோடி பேருக்கு பரவக்கூடும்" - கொரோனா வைரஸ் எச்சரிக்கும் மருத்துவர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
 

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.

மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.

இது உண்மையா? கொரோனா தொற்று பரவாமல் இந்தியாவில் தடுக்கப்படுமா? ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவின் நிலை என்னவாக ஆகும்? - இப்படிப் பல கேள்விகளை நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணனிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா எந்த அளவுக்கு பாதிக்கப்படும்?

உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று தற்போதைய நிலையில் சொல்ல முடியாது. கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை அதிகளவில் பரிசோதிக்க தொடங்கினால்தான் நிலைமை தெரிய வரும். கொரோனா தொற்று தீவிரமாவதைப் பொறுத்தவரை நாம் சில வாரங்கள் பின் தங்கியிருக்கிறோம். அவ்வளவு தான். ஆனால் ஸ்பெயினில் சமீபத்தில் நாம் பார்த்ததை போல இன்னும் சில வாரங்களில் இந்த தொற்று சுனாமி போன்று உருவெடுக்கலாம்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?

அதிகம் பேருக்குப் பரிசோதனை செய்யும்போது தொற்று அதிகளவு பரவி இருப்பதை நாம் கண்டறிய நேரிடலாம். ஆனால் உலகம் முழுவதுமே குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனை நடப்பது ஒரு பிரச்சனை. ஆனால் சில வாரங்களில் பரிசோதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என நினைக்கிறேன். அதே போலத் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் ஆயிரங்களை எட்டலாம். நாம் நிச்சயம் அதற்குத் தயாராக வேண்டும். சீனாவைப் போல அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடு இந்தியா. எனவே வைரஸ் தொற்று பரவுவது எளிது. கொரோனாவின் சமூக பரவல் மிக வேகமாக நடக்கலாம். கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மூலம் இரண்டு பேருக்குக் கூடுதலாகதொற்று ஏற்படுவதை நினைவிற்கொள்ள வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News