×

இப்போது கொரோனா பரவாதா? கோயம்பேட்டில் கூட்ட நெரிசல் :  அதிர்ச்சி புகைப்படம்

நாடெங்கும் கொரானா வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சீனாவில் உருவாகிய வைரஸ் தற்போது தமிழகம் வரை பரவி விட்டது.  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று மாலை வரை 12 ஆக உயர்ந்து விட்டது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை தமிழக அரசு நேற்று மாலை திடீரென அறிவித்தது. இதைத்தொடர்ந்து, பேருந்துகள் இயங்காது என்பதால் லட்சக்கணக்கான பேர் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. சுமார் 1.48 லட்சம் பேர் நேற்று மட்டும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஒருவருடன் ஒருவர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும், கூட்டமாக எங்கும் கூடக்கூடாது என பல்வேறு அறிவுரைகளை கூறி வந்த அரசு, திடீரென 144 அறிவித்ததால் வேறுவழியின்றி ஏராளமானோர் ஒரே இடத்தில் ஒன்று கூடிய நிலை ஏற்பட்டது. மேலும், பேருந்தில் அமர இடமில்லாமல் நெருக்கமாக அருகருகே அமர்ந்து பலரும் பயணித்துள்ளனர். பேருந்தின்  மேற்கூரை பயணிக்கும் நிலையும் ஏற்பட்டது.

இதை தவிர்க்க முடியாது என்றாலும் அரசு கொஞ்சம் முன் கூட்டியே யோசித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம். அல்லது 144 தடை உத்தரவை கொஞ்சம் முன் கூட்டியே அறிவித்து அதிகமான இடங்களில் தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News