Categories: Cinema News latest news throwback stories

இயக்குனர் மட்டும்தான் திரைக்கதை அமைப்பாரா? இளையராஜாவின் சோகப்பாடலில் இத்தனை புதுமையா?

ஒரு பாட்டுக்குள்ள இயக்குனர் திரைக்கதை அமைக்கலாம். ஆனால் இசை அமைப்பாளர் திரைக்கதை அமைக்க முடியுமான்னா முடியும்னு நிரூபிச்சிருக்கிறார். அது என்ன படம்னா வைதேகி காத்திருந்தாள். வாலி எழுத ஜெயச்சந்திரன் அருமையாகப் பாடியிருப்பார். இந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை இல்லை என்றால் முழுக்க முழுக்க இது சோகமயமான படம் தான்.

இந்தப் பாடலில் காதலி இறந்து விடுகிறாள். அவள் வரமாட்டாள் என்பது தெரியும். இரவில் உட்கார்ந்து அழுவது போன்ற பாடல் இது. இந்தப் பாடலை இளையராஜா சிவரஞ்சனி ராகத்தில் பாடியிருப்பார். ஆனால் அதுதானா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமாக அமைத்திருப்பார்.

இந்தப் பாடலில் காதலன் காதலிக்காக எவ்வளவு ஏங்குகிறான் என்று அருமையாக வரிகளை எழுதியிருப்பார். ஜெயச்சந்திரன் குரல் சோகத்தை ஹம்மிங்கில் அருமையாகக் கொண்டு வந்து இருப்பார். புல்லாங்குழலின் ஓசையும் பாடலுக்கு கூடுதல் நயத்தைக் கொடுக்கும்.

‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி, நேற்று வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி, நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி…’ என பாடல் வரிகளை அருமையாகப் போட்டு இருப்பார் கவிஞர் வாலி.

Vaitheki kathirunthal

ஆனால் காதலன் அணைக்கிறதுக்கான வாய்ப்புகளே கிடையாது. ஆனாலும் அவனோட வலியை அழகாகக் கொண்டு வந்திருப்பார். பாடல் முழுவதும் இந்த உணர்வு தென்படும்.

முதல் சரணத்தில் ‘தேன் வடிச்ச பாத்திரமே’ என்ற வார்த்தை வரும். தேன் என்றால் அவள். அந்தப் பாத்திரம் அவளது நினைவுகள். 2வது சரணத்தில் உனக்கு யாரை விட்டு நான் தூது சொல்ல என ஆதங்கத்தைத் தெரிவித்து இருப்பார்.

இந்தப் பாடலில் இளையராஜா ஒரு தாலாட்டை உள்ளே சொருகி இருப்பார். 2வது சரணத்திற்கு இடையே ‘பாடா படுத்தும் காடா கருப்பா’ என உடுக்கை சத்தத்துடன் ஒரு வித்தியாசமான குரலுடன் இசையைக் கொண்டு வந்து இருப்பார். பாட்டுக்குள்ளே ஒரு திரைக்கதையை அமைத்து இருப்பார் இசைஞானி.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

வைதேகி காத்திருந்தாள் படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். வெள்ளைச்சாமி கேரக்டரில் வரும் விஜயகாந்த் அருமையாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v