×

ரெய்டுக்கு பின்னால் அரசியல் பின்னனியா? மிரட்டப்படுகிறாரா விஜய்?... நடப்பது என்ன?

தமிழ் சினிமா நடிகர் விஜய் தரப்பிடம் நடத்தப்பட்ட அதிரடி வருமான வரிச்சோதனைக்கு பின்னணியில் அரசியல் பின்னணி இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
 

தலைவா (Time to lead) என தலைப்பு வைக்கப்பட்ட முதலே அரசியல் நெருக்கடிகளை விஜய் சந்தித்து வருகிறார். அப்படத்தை வெளியிட முடியாமல் 3 நாட்கள் பிரச்சனை கொடுக்கப்பட்டது. அதன்பின் அவரின் புலி திரைப்படம் வெளியானது அன்றே அவரின் வீடு, அலுவகம், அப்பட தயாரிப்பாளரின் அலுவலம் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதனால் அப்படத்தின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ரிலீஸும் தாமதமானது. தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து வலுக்கட்டாயமாக அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தியுள்ளனர். 

விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தனது திரைப்படங்களில் நடப்பு அரசியலுக்கு எதிரான சில வசனங்களை பேசி வருகிறார். பிகில் பட இசை வெளியிட்டு விழாவில் தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் அவர் பேசியது எல்லோருக்கும் தெரியும். 

பிகில் பட வியாபாரம் ரூ.300 கோடியை தாண்டி விட்டதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

விஜயை விட அதிக சம்பளம் பெறுபவர் ரஜினி. விஜய் படங்களை அதிக கோடி பட்ஜெட்டில் அவரின் படம் தயாராகிறது. ஆனால், அவரிடம் ஒருபோதும் இதுபோன்ற சோதனைகளோ, கெடுபிடிகளோ நடைபெற்றதில்லை. எந்த படப்பிடிப்பிலிருந்தும் அவர் வலுக்கட்டாயமாக இதுவரை அழைத்து செல்லப்பட்டது கிடையாது.

ரஜினி எப்போதும் தமிழக  மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பேசமாட்டார். (1996ல் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதை தவிர). தூத்துக்குடி விவகாரம், பணமதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மக்கள் வாக்கெடுப்பு என அனைத்திலும் ஆளும் அரசுக்கு ஆதரவாகவே அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.  அதனால்தான், அவரை விட்டு விடுவதாகவும், அதன் காரணமாகவே சமீபத்தில் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்த வருமான வரித்துறையினர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சினிமாவில் கருப்பு பணம் புலங்குவது உண்மைதான். அதை மறுப்பதிற்கில்லை. அதேபோல், வருமான வரித்துறையினர் நினைத்தால் எப்போதும் யாரிடமும் சோதனை நடத்தலாம். அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அந்த அதிகாரம் பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் செயல்படுகிறதா என்பதுதான் கேள்வி. ஏன் விஜய் குறிவைக்கப்படுகிறார்?.. 

ரஜினியின் கடைசி 4 திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம் விஜயின் கடைசி 4 திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்துள்ளது. ரஜினி திரைப்படங்களை விட விஜயின் திரைப்படங்கள் அதிக லாபத்தை பெற்றுத்தருகிறது. ரஜினியை விட விஜய் வளர்ந்து நிற்கிறார். தனது திரைப்படங்களில் அரசியல் பேசுகிறார். சினிமா விழாக்களில் அரசை விமர்சித்தும் பேசி வருகிறார். நிச்சயம் அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. எனவே, அவரது வளர்ச்சியை தடுக்க, அவரை பயமுறுத்தும் நடவடிக்கையாக இந்த சோதனையை பார்க்கிறோம் என பல சினிமா விமர்சகர்களும், அரசியல் தலைவர்களும் கூறியுள்ளனர். ஒருபக்கம், பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.77 கோடி தொடர்பான புகைப்படங்களை விஜயுடன் இணைத்து அவர் வீட்டில்தான் அப்பணம் கைப்பற்றப்பட்டதாக தவறான செய்திகளையும் பல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

விஜய் தரப்பிடம் நடத்தப்பட்ட சோதனையில் உள்நோக்கம் இல்லை என காரணம் கூறப்பட்டாலும் இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நமக்கு எழும் சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News