`ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்!’ - முதல்வரின் மாஸ் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தடையின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கென தனி சிறப்புச் சட்டம் கொண்டு வரக் கோரியும் கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராடினர். இந்தப் போராட்டங்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 179 பேர் மீது 8 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு சிறப்புச் சட்டத்தை இயற்றியிருக்கும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான இந்த வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் தமிழக அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்தன.
இந்தக் கோரிக்கைக்குத் தமிழக அரசு தற்போது செவிசாய்த்திருக்கிறது. இதுதொடர்பாக சட்டப்பேரையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``ஜல்லிக்கட்டு போராட்டங்களின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வழக்குகளை வாபஸ் பெறப்படும். காவலர்களைத் தாக்கியது, வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தியது உள்ளிட்ட ஒரு சில குற்ற வழக்குகளைத் தவிர மற்றவர்கள் மீது போட்டப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்புத் தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.