"அப்பா உருவாக்கிய பெயரை காப்பாற்றுவது என் பொறுப்பு!" - ஜேசன் சஞ்சய் உணர்ச்சிப்பூர்வ பேச்சு

 
sanjay

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகியுள்ள தனது முதல் திரைப்படமான 'சிக்மா' படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தொகுப்பாளினி டிடி உடனான சமீபத்திய நேர்காணலில் தனது குடும்பம், தந்தையின் அறிவுரை மற்றும் இயக்குநர் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய ஜேசன் சஞ்சய், "என் தந்தை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளார். அது எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பம் முழுவதற்கும் கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பொறுப்பை நான் தொடர்ந்து சுமக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் செயல்பட்டு அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என் எண்ணம்" என்று கூறினார்.

மேலும், தனது தந்தை வழங்கிய முக்கியமான அறிவுரை குறித்து பேசும்போது, "எனக்காக தனி அடையாளத்தையும் தனி பெயரையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையே அப்பா வலியுறுத்தினார். 'உனக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேள். ஆனால் முயற்சிகளை நீயே முன்னின்று செய்ய வேண்டும். நானாக முன்வந்து எதையும் செய்து தரமாட்டேன்' என்று அவர் கூறிய அறிவுரை எனக்கு மிகவும் பிடித்தமானது" என்றார்.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா'. இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அதிரடி மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப் படம், இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் முயற்சி என்பதால் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வரும் ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தின் மூலம் இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web