முதலமைச்சர் விஜய்க்கு 2 புதிய ஆலோசகர்கள்!.. இதுக்கும் ஏழரை இழுப்பாங்களா?!...
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளை பெற்றதோடு 108 தொகுதிகலில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்று தவெக ஆட்சி அமைந்திருக்கிறது..
ஒருபக்கம் தவெக அமைச்சரவையில் இதுவரை 33 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில் இன்று காலை விசிக எம்.எல்.ஏ வன்னியரசு மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ ஷாஜகான் இருவரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். எனவே தவெக அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்யசாமியும், பொது நிகழ்வுகள் ஆலோசகராக விஷ்ணு ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஜான் ஆரோக்யசாமி ஏற்கனவே விஜயின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அரசியல் தொடர்பான முடிவுகளுக்கும், தேர்தல் தொடர்பான பணிகளுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் இவர். விஷ்ணு ரெட்டி விஜய்க்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் அரசியல் தொடர்பான ஆலோசனைகளை விஜய்க்கு கூறிவந்தார்.
ஏற்கனவே விஜய்க்கு மிகவும் நெருக்கமான பிரபலமான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் விஜயின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தவெகவுக்கு ஆதரவு கொடுத்த அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவரின் பதவி நியமனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்தான், ஜான் ஆரோக்கிய சாமியும், விஷ்ணு ரெட்டியும் விஜயின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
