
latest news
Kaur: கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்?.. நீதிமன்றத்தில் போலீஸ் – தவெக காரசார வாக்குவாதம்!..
Kaur: கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தபோது 10 குழந்தைகள், 7 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் கூட்ட நெரிசில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். இந்த சோக சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு விஜய்தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும் என திமுகவினரும், இது திமுகவின் திட்டமிட்ட சதி என தவெகவினரும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
ஒருபக்கம் இதற்கு தனிப்பட்ட விசாரணை அல்லது சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என தவெக தரப்பு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. மற்றொரு பக்கம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கரூர் காவல்துறை கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்கள். நீதிபதி பரத்குமார் முன் நடந்த விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞருக்கும், தவெக வழக்கறிஞருக்கும் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது.

காவல்துறை டிஎஸ்பி தெரிவித்த கருத்தில் ‘கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தவெகதான் காரணம். விஜய் பிரச்சார வேன் மேல் வந்த சிறிது நேரத்தில் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவர் பேசும் இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்பு அவரை பேச சொன்னோம். ஆனால் தவெக கட்சியினர் கேட்கவில்லை. சூழலை கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். அவர்கள் அதை கேரவனில் இருந்த விஜயிடம் சொல்லவில்லை. 500 போலீசார் பாதுகாப்பு கொடுத்தார்கள். அதற்கான ஆதாரங்களை தருகிறோம்’ எனக் கூறினார்கள்.
தவெக வழக்கறிஞர் வாதிட்டபோது ‘கரூரில் மக்கள் உயிரிழந்ததற்கு அரசுதான் காரணம். அசாதாரண சூழல் என கணித்த போலீசார் ஏன் அங்கு பிரச்சார வாகனத்தை அனுமதித்தார்கள்/ ஜெனரேட்டர் வசதி இருந்ததால்தான் அந்த இடத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்கள் கூட்டத்திற்கு வருவதை தடுப்பதற்கான அதிகாரம் போலீசாரிடம்தான் இருக்கிறது. எங்கள் மேல் பழி சுமத்துகின்றனர். நீங்கள் நிபந்தனைகளை விதியுங்கள். ஆனால் கைது நடவடிக்கை வேண்டாம்’ என தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தார்.
மேலும் ‘விஜய் வாகனத்தை சுற்றி பேரிகார்ட் அமைக்க அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அது அமைக்கப்படவில்லை. 4 மாவட்டங்களில் இருந்து நிறைய தொண்டர்கள் வந்துவிட்டதால் சமாளிக்க முடியவில்லை. நெருக்கடி கால வழி என எதுவும் அங்கு இல்லை. சென்டர் மீடியன்களை அகற்றி இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை வரும் வரை கைது நடவடிக்கை கூடாது.

லைட் ஹவுஸ் பகுதியில் ஏற்கனவே பல கூட்டங்கள் நடந்திருக்கிறது. அந்த பகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர அடி இருப்பதாக நாங்கள் அளந்து பார்த்து உறுதி செய்தோம். அங்கு 60 ஆயிரம் பேர் வரை நிற்கலாம். ஆனால் போலீசார் அந்த இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை. 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என உளவுத்துறை கூறியதாக போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்’ என்கிற வாதத்தையும் முன் வைத்தனர். இதையடுத்து பேசிய நீதிபதி தவெக வழக்கறிஞரிடம் பல கேள்விகளை முன் வைத்தார்.
நீங்கள் கேட்ட 3 இடங்களுமே சிறியது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை என்பதால் நிறைய மக்கள் வருவார்கள். நீங்கள் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி கணக்கிட்டீர்கள்?.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்தது கட்சி கூட்டம். ஆனால் விஜய் ஒரு பெரிய நடிகர். அவரை பார்க்க பலரும் வருவார்கள். அதற்கு தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். இவ்வளவு பேர் வருவார்கள் என்பது விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா? கூட்டம் அளவு கடந்து போனதை பார்த்த பின் ஏன் நீங்கள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை?’ என்றெல்லாம் நீதிபதி பரத்குமார் கேள்வி எழுப்பினார்.