நான் பார்க்க பிடிக்காத ஊர் சுப்ரமணியபுரம் - சசிகுமாரிடம் கூறிய பாலசந்தர்
கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு சமுத்ரகனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இப்படம் 80களின் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அறிமுக இயக்குனராக களம் இறங்கிய சசிகுமார் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். படம் வெளியாகி முதல் 2 தினங்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் நாட்கள் போக போக படம் குறித்து பாசிடிவ் விமர்சனங்கள் பரவத் தொடங்கியதை அடுத்து படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இன்று வரையும் பலராலும் பாராட்டப்படும் படம் இது.

இந்த நிலையில் சசிகுமார் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சுப்ரமணிய புரம் படம் குறித்து பேசினார். இப்படத்தை பார்க்க இயக்குனர் கே. பாலசந்தர் விரும்பியுள்ளார். இதையடுத்து படத்தை அவருக்கு காண்பித்துள்ளனர். படத்தின் முதல் பாதியை பார்த்த பாலசந்தர் சசிகுமாரிடம் டேய் இந்த சுப்ரமணியபுரம் எங்கடா இருக்கு இவ்வளவு ஜாலியா இருக்காங்க, அந்த ஊரை பார்க்கனுமே என்றாராம். மதுரையில் தான் உள்ளது என்று சசிகுமார் கூறியுள்ளார். பின்னர் இரண்டாம் பாதியை பார்த்துள்ளார் பாலசந்தர். பின்னர் சசியிடம் டேய் இந்த சுப்ரமணியபுரம் எங்க இருக்குனு சொன்ன என்று கூறிவிட்டு இந்த ஊரை நான் பார்க்கவே கூடாது ஓரே வெட்டிகிட்டும் குத்திகிட்டும் இருக்காங்க என்றாராம்.
இதனை கூறிய சசிகுமார் இரண்டாம் பாதியை பார்த்தால் பாலசந்தர் சார் நிச்சயம் இப்படிதான் கூறுவார் என்று நினைத்தேன் என்றார். சுப்ரமணியபுரம் முதல் பாதி கமேடி நிறைந்து ஜாலியாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதி வெட்டு குத்து என வன்முறை காட்சிககள் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.